மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘சொடக்கு’ திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா

31 ஜூலை 2026 கோலாலம்பூர்:

மலேசிய தமிழ் திரையுலகில் புதிய மைல்கல்லை பதிக்கும் வகையில், ‘சொடக்கு’ திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா மலேசியாவின் பத்து கேவ்ஸில் அமைந்துள்ள ஷென்கா கன்வென்ஷன் சென்டரில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவை டத்தோ டாக்டர் கணேசன் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார்.மேலும், மலேசியா–இந்தியா இணைந்து தயாரிக்கப்பட்டு விரைவில் வெளியாகவுள்ள ‘சொடக்கு’ திரைப்படத்திலும் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், கோலிவுட்டில் உருவாகி வரும் மேலும் இரண்டு தமிழ்த் திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார். அந்த திரைப்படங்களும் விரைவில் ரசிகர்களை சந்திக்கவுள்ளன.

விழாவில் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களான வெங்கட் பிரபு மற்றும் லிங்குசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். மேலும், பிரபல வசனகர்த்தா சரண், திரைப்படக் கலைஞர்கள், நடிகர், நடிகைகள், தொழில்துறை பிரமுகர்கள் மற்றும் பல டத்தோக்களும் கலந்து கொண்டு விழாவிற்கு பெருமை சேர்த்தனர்.

தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியாவின் ஜூபிலி பிலிம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள ‘சொடக்கு’ திரைப்படத்திற்கு பிரபல இயக்குநர் சரண் வசனம் எழுதியுள்ளார். இயக்குநர் காமராஜ் மனோன்மணி கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ள இந்த திரைப்படம் முழுமையாக மலேசியாவில் படமாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மலேசியாவின் பல்வேறு அழகிய இடங்களை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், ரசிகர்களுக்கு வித்தியாசமான திரையனுபவத்தை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

நடிகர்கள் நட்ராஜ் மற்றும் விதார்த் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா, அபிஷேக் சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வாழ்க்கையில் ஒரு “சொடக்கு” நேரத்தில் நிகழும் எதிர்பாராத சம்பவங்கள், அதனால் உருவாகும் திருப்பங்கள் மற்றும் பரபரப்பான சூழ்நிலைகளை மையமாகக் கொண்ட அதிரடி திரில்லர் கதையாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.

இவ்விழாவில் மேலும் ஒரு பெருமைக்குரிய தருணமாக, மலேசிய தமிழ் திரையுலகைச் சேர்ந்த இயக்குநர், நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரான டினேஷ் சாரதி மற்றும் நடிகை தேவகன்னி ஆகியோர் கோலிவுட்டில் தங்களது அடுத்த கட்ட பயணத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கியமை அனைவராலும் பாராட்டப்பட்டது.

மலேசிய தமிழ் திரைப்படங்கள் மூலம் தங்களது திறமையை நிரூபித்த இவர்கள், தற்போது இந்திய தமிழ் திரையுலகிலும் தங்களது முத்திரையைப் பதிக்கத் தயாராகியுள்ளனர். இவர்களின் இந்த சாதனை, தனிப்பட்ட வெற்றியாக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மலேசிய தமிழ் கலைத்துறைக்கும் பெருமை சேர்க்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகக் கருதப்படுகிறது.

மலேசியா கலை உலகம் (MKU) சார்பில், டினேஷ் சாரதி மற்றும் தேவகன்னி ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன. கோலிவுட்டில் இவர்களின் பயணம் மேலும் பல வெற்றிகளைப் பெற்று, உலக அரங்கில் மலேசிய தமிழ் கலைஞர்களின் திறமையை உயர்த்தும் என்ற நம்பிக்கையும் வெளியிடப்பட்டது.

‘சொடக்கு’ திரைப்படம் தொடர்பான அடுத்தடுத்த அறிவிப்புகள், வெளியீட்டு தேதி மற்றும் சிறப்பு நிகழ்வுகள் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர்:டாக்டர் எஸ். பி. பிரபாம லேசியா கலை உலகம் (MKU)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *