திறமையான இளம் ஹாக்கி வீரருக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி ஊக்கமளித்தார் ஸ்ரீ மு. இராமசாமி

கோலாலம்பூர், ஜூலை 16

இளம் தலைமுறையின் விளையாட்டு திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கில், மாவட்ட அளவிலான ஹாக்கி பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் டோவென்பி தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர் கலைஅமுதன் தியாகராஜன் அவர்களுக்கு, சமூக ஆர்வலர் ஸ்ரீ மு. இராமசாமி அவர்கள் ஹாக்கி விளையாட்டிற்குத் தேவையான உபகரணங்களை அன்பளிப்பாக வழங்கினார்.

இந்த நிகழ்வு, திறமையான மாணவர்களுக்கு உரிய நேரத்தில் ஊக்கமும் ஆதரவும் கிடைத்தால் அவர்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவிலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.

விளையாட்டு உபகரணங்களைப் பெற்றுக் கொண்ட கலைஅமுதன் தியாகராஜன், தற்போது மாவட்ட அளவிலான ஹாக்கி பயிற்சியில் சிறப்பாக பங்கேற்று வருவதுடன், எதிர்காலத்தில் மாநில மற்றும் தேசிய அணிகளில் இடம்பிடிக்கும் இலக்குடன் கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

இந்நிகழ்வில் பேசிய ஸ்ரீ மு. இராமசாமி, “இளம் திறமையாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு தேவையான ஆதரவை வழங்குவது சமூகத்தின் பொறுப்பு. இன்று வழங்கப்படும் இந்த சிறிய உதவி, நாளைய ஒரு தேசிய வீரரை உருவாக்கும் விதையாக அமைய வேண்டும். கல்வியிலும், விளையாட்டிலும் சிறந்து விளங்கி நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதே எங்களின் வாழ்த்தாகும்,” என்றார்.

பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினரும் இந்த உதவிக்காக ஸ்ரீ மு. இராமசாமி அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்ததுடன், மாணவர்களின் திறமையை வளர்க்க சமூகத்தின் பங்களிப்பு மிகவும் அவசியம் எனக் குறிப்பிட்டனர்.

இளம் வீரர் கலைஅமுதன் தியாகராஜன், பள்ளி, மாவட்டம், மாநிலம் மற்றும் மலேசியாவிற்கு பெருமை சேர்க்கும் சிறந்த ஹாக்கி வீரராக உயர வேண்டும் என்றும், அவரது வெற்றிப் பயணம் தொடர்ந்து சிறக்க அனைவரும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *