மோரிப் கடற்கரையில் கோலாகலமாக நடைபெறவுள்ளது ‘நியோன் நிலவு 2.0’ இசை விழா 2026

கோலாலம்பூர், ஜூன் 25

– இயற்கைச் சூழலுடன் இசையையும் சமூகப் பொறுப்புணர்வையும் இணைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘நியோன் நிலவு 2.0’ இசை நிகழ்ச்சி, வரும் ஜூன் 27ஆம் தேதி சனிக்கிழமை மோரிப் கடற்கரையில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

முன்னதாக ‘நியோன் நிலவு’ நிகழ்ச்சியின் முதல் பதிப்பு அருவி சூழலில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட நிலையில், இரண்டாவது பதிப்பான ‘நியோன் நிலவு 2.0’ கடற்கரைச் சூழலில் இசை ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை வழங்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

மாலை 2.00 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் நேரடி இசை நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு அம்சங்கள், புதையல் தேடும் போட்டி உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்ய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. குடும்பத்தினர், இளைஞர்கள் மற்றும் இசை ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, இதன் மூலம் கிடைக்கும் லாபம் முழுமையாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு குழந்தையின் மருத்துவச் சிகிச்சைக்காக நன்கொடையாக வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் சமூக நலனையும் மனிதாபிமான சேவையையும் முன்னிறுத்தும் முயற்சியாக இந்த விழா அமைகிறது.

இசை நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் பிரபல பாடகர்களான வேல்முருகன் மற்றும் அருள் பிரகாசம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தங்களது இசை நிகழ்ச்சிகளை வழங்கவுள்ளனர். அதேவேளையில் மலேசியாவின் முன்னணி உள்ளூர் கலைஞர்களான சந்தேஷ், குமரேஷ் மற்றும் புவனேஸ்வரி உள்ளிட்டோரும் மேடையேறி ரசிகர்களை உற்சாகப்படுத்தவுள்ளனர்.

இந்நிகழ்ச்சி தொடர்பான செய்தியாளர் சந்திப்பு செந்தூலில் அமைந்துள்ள ரூட்ஸ் 88 ஸ்போர்ட் பாரில் நடைபெற்றது. அந்நிகழ்வில் பேசிய ஜெனிரா நிறுவனத்தின் இயக்குநர் ரூபன், இசை மற்றும் சமூக சேவையை ஒருங்கிணைக்கும் நோக்கில் ‘நியோன் நிலவு 2.0’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

“இது ஒரு சாதாரண இசை நிகழ்ச்சி மட்டுமல்ல. இயற்கையின் மத்தியில் மக்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்குவதோடு, உதவி தேவைப்படும் ஒரு குழந்தையின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் சமூகப் பணியுமாகும். பொதுமக்கள் இந்த முயற்சிக்கு ஆதரவு வழங்க வேண்டும்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், நிகழ்ச்சியின் வெற்றிக்காக ஆதரவு வழங்கிய முதன்மை அனுசரணையாளர்களான எசான் குரூப், புளு பிரதர்ஸ் மற்றும் பிற நிறுவனங்களுக்கும் ஜெனிரா நிறுவனத்தின் சார்பில் ரூபன் தனது நன்றியைத் தெரிவித்தார்.

இசை, பொழுதுபோக்கு மற்றும் சமூக அக்கறை ஆகிய மூன்றையும் ஒருங்கிணைக்கும் ‘நியோன் நிலவு 2.0’ நிகழ்ச்சி, இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க தமிழ் இசை நிகழ்வுகளில் ஒன்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *