டெங்கில் புக்கிட் ராஜா பழங்குடியினர் கிராம மக்களின் இழப்பீட்டு பிரச்சினைக்கு விரைவில் ஒருங்கிணைப்பு கூட்டம் – பாப்பாராயுடு

தேதி: 22 ஜூன் 2026

ஷா ஆலாம், ஜூன் 22 – சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்னதாக, சிலாங்கூர் மாநில பழங்குடியினர் மற்றும் சிறுபான்மை இன விவகாரங்களுக்கான நிரந்தரக் குழுத் தலைவரான பாப்பாராயுடு, தெங்க்கில் பகுதியில் உள்ள கம்போங் ஓராங் அஸ்லி புக்கிட் பாஜா கிராம மக்களுடன் முக்கிய சந்திப்பொன்றை நடத்தினார்.

இந்த சந்திப்பில் 23 கிராம மக்கள் பங்கேற்று, நில மேம்பாட்டு திட்டத்துடன் தொடர்புடைய இழப்பீட்டு விவகாரங்கள் குறித்து தங்களது அதிருப்தி, அச்சம் மற்றும் கருத்துக்களை நேரடியாக முன்வைத்தனர். வழங்கப்பட்ட இழப்பீடு நியாயமானதாகவும் போதுமானதாகவும் இல்லை என அவர்கள் குற்றம்சாட்டியதாக தெரிவிக்கப்பட்டது.

மக்கள் முன்வைத்த ஒவ்வொரு புகாரையும் கவனமாகக் கேட்டறிந்த பாப்பாராயுடு, எழுப்பப்பட்ட அனைத்து பிரச்சினைகளையும் முறையாக ஆய்வு செய்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.

“பழங்குடியினர் சமூகத்தின் பிரச்சினைகள் எப்போதும் எனது கவனத்திலும் இதயத்திலும் உள்ளன. அவர்களின் உரிமைகள், நலன் மற்றும் எதிர்காலம் பாதுகாக்கப்படுவது மிக முக்கியமானது. அவர்களின் குரல்கள் கேட்கப்பட வேண்டும்; அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநிலத்தின் பழங்குடியினர் மற்றும் சிறுபான்மை இன விவகாரங்களுக்கான நிரந்தரக் குழுத் தலைவராகப் பொறுப்பு வகிக்கும் அவர், பழங்குடியினர் சமூகத்தின் நலன்களை உறுதிப்படுத்துவதில் மாநில அரசின் அர்ப்பணிப்பு தொடரும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த விவகாரத்திற்கு முழுமையான மற்றும் நீடித்த தீர்வை காணும் நோக்கில், தனது அலுவலகம் விரைவில் ஒருங்கிணைப்பு கூட்டமொன்றை ஏற்பாடு செய்யவுள்ளதாகவும் அவர் அறிவித்தார். அந்தக் கூட்டத்தில் சிலாங்கூர் மாநில பழங்குடியினர் மேம்பாட்டு துறை (JAKOA), சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகம் (PKNS) மற்றும் சம்பந்தப்பட்ட கிராம மக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட முக்கிய தரப்புகள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், பழங்குடியினர் சமூகத்திற்கும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களுக்கும் இடையே பாலமாகச் செயல்பட்டு, அவர்களின் உரிமைகள் மற்றும் நலன்கள் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் வெளிப்படையான, நியாயமான மற்றும் சமூக நலனை மையமாகக் கொண்ட பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாக பாப்பாராயுடு கூறினார்.

இந்த சந்திப்பு, சிலாங்கூர் மாநிலத்தில் பழங்குடியினர் சமூகத்தின் நலன் மற்றும் உரிமைகளைப் பாதுகாக்க மாநில அரசின் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *