உடற்பயிற்சி துறையில் தொடர்ந்து சாதனைகள் படைத்து வரும் ஜெய் பிரபாகரன் குணசேகரன்

குவாந்தான், ஏப்ரல் 23 —


உடற்பயிற்சி துறையில் தொடர்ந்து சாதனைகள் படைத்து வரும் ஜெய் பிரபாகரன் குணசேகரன், தனது மூன்றாவது உலக சாதனையை நோக்கி தீவிரமான முயற்சியில் இறங்கியுள்ளார். 29 வயதான இவர், இதற்கு முன்பு இரு உலக சாதனைகள், ஐந்து தேசிய சாதனைகள் மற்றும் ஒரு ஆசிய சாதனையைப் பதிவு செய்து விளையாட்டு உலகில் தனித்த இடத்தைப் பிடித்துள்ளார்.

பகாங் மாநிலத்தின் கோலா லிப்பிசைச் சேர்ந்த ஜெய் பிரபாகரன், உடற்பயிற்சியை ஒரு தொழில்முறை முயற்சியாக மட்டுமின்றி, சமூகப் பொறுப்பாகவும் கருதி செயல்பட்டு வருகிறார். குறிப்பாக இளைஞர்களை ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு திருப்புவதில் அவர் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, உடற்பயிற்சியை ஊக்குவிக்கும் சங்கத்தை நிறுவி, பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.

கடந்த 2023ஆம் ஆண்டு, இடைவிடாது 12 மணிநேரம் உடற்பயிற்சி செய்து உலக சாதனையைப் படைத்த அவர், அதற்குப் பிறகு 2024ஆம் ஆண்டில் 15 மணிநேரம் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து தனது சாதனையைத் தானே முறியடித்தார். இப்போது, அதனை மேலும் உயர்த்தும் வகையில் 18 மணிநேர இடைவிடாத உடற்பயிற்சியை இலக்காகக் கொண்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

“இந்த முயற்சி உடல் வலிமையை மட்டும் சோதிப்பதல்ல; மன உறுதி, ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாட்டின் சவாலும் ஆகும். தினசரி கடுமையான பயிற்சிகளுடன், கட்டுப்படுத்தப்பட்ட உணவுமுறையையும் கடைப்பிடித்து வருகிறேன். எனது முயற்சி வெற்றியாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது,” என்று அவர் தெரிவித்தார்.

வரும் மே மாத இறுதியில், குவாந்தானில் தனது மூன்றாவது உலக சாதனை முயற்சியை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த முயற்சிக்காக அவர் தற்போது முழு நேர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும், அரசாங்கத்துடன் இணைந்து MYFIT என்ற புதிய முயற்சியை தொடங்கி, குறிப்பாக இந்திய இளைஞர்களை உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு துறைகளில் ஈடுபடுத்தும் பணியிலும் அவர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இந்த முயற்சி, உடல் ஆரோக்கியத்துடன் மனநலம் மற்றும் ஒழுக்கத்தை வளர்க்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளது.

“உடற்பயிற்சி என்பது வெறும் உடலை மட்டுமே பலப்படுத்துவது அல்ல; அது ஒருவரின் வாழ்க்கை முறையையே மாற்றக்கூடிய சக்தி கொண்டது. இளைஞர்கள் அதிகம் இதில் ஈடுபட வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

ஜெய் பிரபாகரனின் இந்த புதிய முயற்சி, மலேசியாவில் உடற்பயிற்சி கலாச்சாரத்தை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *