சத்தியாவுக்கு உதவும் நோக்கில் “நன்றி சொல்ல உனக்கு” எனும் தலைப்பில் மாபெரும் விழா ஒன்று நடைபெற உள்ளது

கோலாலம்பூர், ஏப்ரல் 15:

மலேசிய மக்களை நீண்ட காலமாக தனது நகைச்சுவை திறமையால் சிரித்து மகிழ வைத்த கலைஞர் தொக்கோ சத்தியாவுக்கு உதவும் நோக்கில் “நன்றி சொல்ல உனக்கு” எனும் தலைப்பில் மாபெரும் விழா ஒன்று நடைபெற உள்ளது.

இவ்விழா வரும் மே 8ஆம் தேதி மாலை 7 மணிக்கு கோலாலம்பூரில் உள்ள விஸ்மா துன் சம்பந்தன் வளாகத்தில் அமைந்துள்ள டிபிஎம் ஸ்டுடியோவில் நடைபெறும் என்று அதன் இயக்குநர் ஜெகன் தெரிவித்தார்.

தமிழ் மற்றும் மலாய் ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நகைச்சுவை கலைஞராக திகழ்ந்த சத்தியா, தனது தனித்துவமான நடிப்பாலும் காமெடி பாணியாலும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவர். குறிப்பாக நகைச்சுவை துறையில் அவருக்கு இணையானவர் இன்றளவும் இல்லை என கலை உலகம் பாராட்டுகிறது.

இந்நிலையில், சத்தியா கடந்த சில காலமாக உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த ஆண்டு அவரது காலின் ஒரு பகுதி அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தற்போது தொடை பகுதி வரை அகற்றப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின் அவர் ஓய்வில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், அவருக்கு உதவியும் ஆதரவையும் அளிக்கும் நோக்கில் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. “நான் ஒரு மலேசியா” ஊடகத்தின் எஸ்.பி. பிரபா ஏற்பாட்டிலும், சி.ஆர். கார்த்திக் ஒத்துழைப்பிலும் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மேலும், ஆர்டிஎம் புகழ் கலைப்படம் பாணியில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன. டிஎச்ஆர் புகழ் கவிமாறன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார். நாட்டின் பல்வேறு கலைஞர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்க உள்ளனர்.

இவ்விழா மூலம் நேரடியாக நிதியுதவி பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக, பொதுமக்கள் டிக்கெட் வாங்கி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதன் மூலம் சத்தியாவுக்கு உதவ முடியும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். தனிப்பட்ட முறையில் உதவி வழங்க விரும்புபவர்கள் அவரை நேரடியாக சந்தித்து உதவலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு இந்த மனிதநேய முயற்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என ஜெகன் கேட்டுக்கொண்டார்.

மேலும் தகவல்களுக்கு:

ஜெகன் – 018-2685774

டாக்டர் எஸ்.பி. பிரபா – 012-6261489

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *