தமிழ் புத்தாண்டு விழா: டத்தோ ஸ்ரீ ஜி – தமிழ் டிஜிட்டல் ஊடகங்களுடன் நேர்காணல் சந்திப்பு

புசோங், 14 ஏப்ரல் 2026:

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, கலைத்துறையில் நீண்டகாலமாக சேவையாற்றி வரும் டத்தோ ஸ்ரீ ஜி அவர்கள், தமிழ் ஊடக நண்பர்களுடன் சிறப்பு சந்திப்பு மற்றும் இரவு விருந்து நிகழ்வை ஏற்பாடு செய்தார்.

இந்த நிகழ்ச்சி புசோங் பகுதியில் அமைந்துள்ள லெஜண்ட் சீஃபுட் உணவகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட தமிழ் ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசு சாரா அமைப்புகளைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் MITRAA FC அமைப்பின் தலைவர் திரு. டி. சரஸ்குமார் மற்றும் தேசிய ம.இ.கா தகவல் பிரிவு அதிகாரி சிவசுப்பிரமணியம் அவர்கள் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். ஊடகத் துறையினருடன் நல்லிணக்கமும் உறுதியான தொடர்பும் உருவாக்கும் நோக்கில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு டத்தோ ஸ்ரீ ஜியின் புதிய ஆடல் காணொளி விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. சமீப காலங்களில் அவரது ஆடல் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அதேவேளை, இந்திய திரைப்படங்களிலும் அவர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நிகழ்வு, கலைத்துறை மற்றும் ஊடகத் துறைகளுக்கிடையேயான ஒத்துழைப்பையும் உறவையும் வலுப்படுத்தும் முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது.

நிகழ்வின் இறுதியில், ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எஸ்.பி. பிரபா அவர்கள், இந்த சிறப்பான சந்திப்பு நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து ஆன்லைன் ஊடக உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *