ஷா ஆலாம் நகர மையத்தை உருமாற்றும் ‘எஸ்.ஏ. சென்ட்ரல்’ திட்டம் 20 விழுக்காடு நிறைவு
ஷா ஆலாம், பிப் 26 –

ஷா ஆலாம் நகர மையத்தின் தோற்றத்தையே மாற்றியமைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் ‘எஸ்ஏ சென்ட்ரல்’ (SA Sentral) எனும் ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்டம் தற்போது 20 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது.
சுமார் 145 ஏக்கர் பரப்பளவில் ஏழு முதல் பத்து ஆண்டுகால நீண்டகாலத் திட்டமாகச் செயல்படுத்தப்படும் இத்திட்டம், விற்பனை முன்பதிவுகளில் அமோக வரவேற்பைப் பெற்றுச் சரியான பாதையில் பயணிப்பதாக சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
இந்த மேம்பாட்டுத் திட்டமானது கோம்பளக்ஸ் பிகேஎன்எஸ், எஸ்ஏசிசி மால் மற்றும் பிளாசா ஆலாம் சென்ட்ரல் போன்ற தற்போதுள்ள வணிகக் கட்டமைப்புகளுடன் உத்தி ரீதியாக இணைக்கப்பட்டு ஒரு விரிவான வர்த்தகச் சூழலை உருவாக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
தற்போது மேம்படுத்தப்பட்டு வரும் பிளாசா ஆலாம் சென்ட்ரல் வரும் ஜூலை மாதத்திற்குப் பிறகு நிறைவடையும் வேளையில், பிளாசா பெராங்சாங்கில் உள்ள கிராண்ட் மெர்க்கியூர் ஹோட்டல் ஆகஸ்ட் மாதம் முதல் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநாட்டு மையம் மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் எனப் பல்வேறு அம்சங்களைக் கொண்ட இத்திட்டம், உள்ளூர் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதோடு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய இடமாகவும் ஷா ஆலாமை மாற்றும் என்று அவர் உறுதியளித்தார்.
செக்சன் 14-இல் நடைபெற்ற ‘ஃபெஸ்டிரா 2026’ நிகழ்வை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிகேஎன்எஸ் குழுமத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி டத்தோ மஹ்மூத் அப்பாஸுடன் இணைந்து இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
சுமார் 3 பில்லியன் ரிங்கிட் மொத்த மேம்பாட்டு மதிப்பைக் கொண்டுள்ள இத்திட்டம், நவீன வடிவமைப்பு மற்றும் குறைந்த கார்பன் நகர அம்சங்களைப் புகுத்தி ஷா ஆலாம் மாநகரை ஒரு ஆற்றல்மிக்க பொருளாதார மையமாக உருமாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.















