பிப்ரவரி 9, ,மலேசியாவின் புகழ்பெற்ற பத்திரிக்கையாளர் ஆதி.குமணன் பிறந்த தினம்.

ஆதி. குமணன், பிப்ரவரி 9, 1950-ல் பினாங்கு மாநிலத்தில் உள்ள பட்டர்வொர்த் நகரில் பிறந்தார். இவர் தந்தை ஆதிமூலம். தாயார் சாரதா. இத்தம்பதியினருக்குப் பிறந்த ஆறு குழந்தைகளில் இரண்டாவதாகப் பிறந்தவர் ஆதி.குமணன். இவரது அண்ணன் எழுத்தாளர் ஆதி. இராஜகுமாரன். ஆதி. குமணனின் இயற்பெயர் குமணபூபதி. தாயாரின் பராமரிப்பில் தனது ஐந்தாவது வயதில் தமிழகம் சென்றவர் தன் ஆரம்பக் கல்வியை தமிழகத்திலேயே கற்றார். 1970-ல் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையில் தன் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார்.
பட்டப்படிப்பை முடித்து, 1970-ல் தமிழகத்தில் இருந்து மலேசியா திரும்பிய ஆதி.குமணனை 1972-ல் அவர் தந்தை பினாங்கிலிருந்து கோலாலம்பூருக்கு அழைத்து வந்து ‘பார்வதி பாளைகாட்’ எனும் துணிக்கடையில் எழுத்தர் வேலை பெற்றுத்தந்தார். தொடக்கத்தில் கோலாலம்பூரில் மலாய் ஸ்டிரீட் பகுதியில் இருந்த ‘பார்வதி பாளைகாட்’ எனும் துணிக்கடையில் வேலை செய்தார். அந்தத் துணிக்கடை நிர்வாகியான சின்னராசு ஆதி. குமணனின் திறனை அறிந்து அவரை எம். துரைராஜிடம் அறிமுகப்படுத்தினார். எம். துரைராஜின் சிபாரிசின் பேரில் என்.டி.எஸ் ஆறுமுகம் பிள்ளையின் நாளிதழான தமிழ் மலரில் உதவி ஆசிரியராகப் பணியைத் துவங்கினார் ஆதி. குமணன்.
தமிழ் மலர் இதழில் உதவி ஆசிரியராக ஆங்கிலத்தில் வந்த செய்திகளை தமிழுக்கு மொழிபெயர்க்கும் பணியை ஆதிகுமணன் செய்துவந்தார். 1970-களில் தமிழ் மலரில் பணியாற்றிய காலத்திலேயே புதுக்கவிதை வடிவத்தைப் பரவலாக அறிமுகம் செய்யும் வகையில் ‘புதன் மலரை’ துவங்கினார். 1976-77-ல் தமிழ் மலரில் நிர்வாகத்தை ஏற்ற புதியவர்களால் ஊழியர்கள் பாதிக்கப்பட்டத்தைத் தொடர்ந்து நிர்வாகத்தை எதிர்த்து போராட்டத்தை மேற்கொண்டார். இதனால் வேலையை இழந்தார். 1977-ல் ஆதி. குமணன் சுயமாக வானம்பாடி (மலேசியா) வார இதழைத் துவங்கினார். துவங்கிய முதல் ஆண்டிலேயே அது 50000 பிரதிகள் வரை விற்றது. மேலும் வானம்பாடி வழி மாதம் ஒரு நாவல் எனும் திட்டத்தைக் கொண்டு வந்து 11 குறுநாவல்களைப் பதிப்பித்தார்.
1981-ஆம்ஆண்டு முன்னால் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சிவலிங்கத்தோடு இணைந்து ‘தமிழ் ஓசை’ நாளிதழின் உரிமத்தை வாங்கியபின், ஆதி. குமணனே அதற்கு நிர்வாக ஆசிரியராகப் பணியில் அமர்ந்தார். அதை மூன்றரை ஆண்டுகள் நடத்தினார்.
1990-ல் மலேசிய நண்பன் நாளிதழை வாங்கி அதன் நிர்வாக ஆசிரியராக இருந்தார். 10 ஆண்டுகளுக்கு மேலாக அதனை வெற்றிகரமாக நடத்தினார். ஆதி. குமணன் ஆசிரியராக இருந்தவரை மலேசிய நண்பனே மலேசியாவில் முதல்நிலை நாளிதழாகத் திகழ்ந்தது. ஞாயிறு ஓசை, மலேசிய நண்பன் இதழில் அவர் எழுதிவந்த பத்தி வடிவிலான ‘பார்வை’யும் கேள்வி பதில் பகுதியான ‘ஞானபீடமும்’ வாசகர்களைப் பெரிதும் கவர்ந்தவை.















