கோலாலம்பூர் | பிப்ரவரி 6

சட்டத்தை மீறுவதற்காக கோயில்கள் கட்டப்படவில்லை; அவை சமூகத்தின் வரலாற்று அடையாளங்களாகவும், நம்பிக்கையின் சின்னங்களாகவும் விளங்குகின்றன என ம.இ.கா. தேசியத் தலைவர் தன் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பழமையான கோயில்களை பொதுவாக ‘kuil haram’ (சட்டவிரோத ஆலயங்கள்) என அழைப்பது சமூகங்களில் தவறான புரிதலையும், இனங்களுக்கிடையிலான பதற்றத்தையும் உருவாக்கும் அபாயம் உள்ளதாக அவர் எச்சரித்தார்.
இன்று கோலாலம்பூரில் வெளியிட்ட அறிக்கையில் அவர் மேலும் கூறியதாவது:
“பல ஆலயங்கள் நிலச் சட்டங்கள் உருவாக்கப்படுவதற்கு முன்னரே, அந்தந்த சமூகங்களின் ஆன்மீகத் தேவைகளுக்காக கட்டப்பட்டவை. அவை சட்டத்தை மீறுவதற்காக அல்ல; சமூக நம்பிக்கையும், வழிபாட்டு மரபையும் காக்கும் நோக்கில் உருவானவை” என்றார்.
எனவே, எந்தவொரு சூழ்நிலையையும் முழுமையாக ஆய்வு செய்யாமல், ஆலயங்களை ‘சட்டவிரோதமானவை’ என பொத்தாம் பொதுவாக குற்றம்சாட்டுவது முறையல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.
சட்டவிரோதமாகக் கட்டப்பட்டதாக கூறப்படும் கோயில்கள் தொடர்பாக, இடிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குப் பதிலாக, மாற்று நிலம் வழங்குதல், ஆலயங்களை இடமாற்றம் செய்தல் அல்லது நியாயமான இழப்பீடு வழங்குதல் போன்ற மனிதாபிமான தீர்வுகளை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டார்.
“சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையைப் பாதுகாக்க இந்த விவகாரத்தை விவேகத்துடனும், பொறுப்புணர்வுடனும் அணுக வேண்டும். பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் இனங்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்தும் செயல்கள் அனுமதிக்கப்படக் கூடாது” என அவர் சுட்டிக்காட்டினார்.
நாளை, சட்டவிரோதமாகக் கட்டப்பட்டதாக கூறப்படும் ஆலயங்களுக்கு எதிராக கோலாலம்பூர் SOGO பகுதியில் பேரணி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் மேலும் உணர்ச்சிவசப்படக்கூடியதாக மாறும் சூழல் உருவாகியுள்ளது.
“எந்தவொரு சமூகத்தின் வரலாறையோ, மரியாதையையோ சிறுமைப்படுத்தாமலும், உரிமைகளை புறக்கணிக்காமலும், சட்டத்தின் மாண்பைக் காக்க முடியும். அதுவே ஒரு பொறுப்பான அரசின் கடமை” என விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் அமைதியுடன் செயல்பட்டு, நாட்டின் சமூக ஒற்றுமையை பாதிக்காத வகையில் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.















