தேதி: 3 பிப்ரவரி 2026

இந்து கோயில்கள் விவகாரத்தில் தேசிய நல்லிணக்கத்திற்கு மதிப்பளிக்க வேண்டும்
– டாக்டர் எஸ். அஸ்வின், ம.இ.ம.க. ஜொகூர் மாநிலத் தலைவர்
ஜொகூர் மாநிலத்தில் உள்ள இந்து கோயில்கள் தொடர்பான விவகாரத்தில், தேசிய நல்லிணக்கம், மொழி மரியாதை மற்றும் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என அனைத்து தரப்பினரையும் ஜொகூர் மலேசிய இந்திய மக்கள் கட்சியின் (MIPP) மாநிலத் தலைவர் டாக்டர் எஸ். அஸ்வின் கேட்டுக் கொண்டார்.
இந்த விவகாரத்தில் “கோயில் ஹராம்” போன்ற சொற்களை பயன்படுத்துவதை அரசாங்க அதிகாரிகள், ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். அந்தச் சொல் மரியாதை குறைவானது மட்டுமல்லாமல், இந்திய சமூகத்தின் மத உணர்வுகளை ஆழமாகப் புண்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வழிபாட்டு தலங்களை தரம் குறைவான அல்லது அவமதிக்கும் சொற்களால் குறிப்பிடுவது முறையல்ல என்றும், சட்ட நடைமுறைகள் மற்றும் நில விதிமுறைகளுக்கு கட்டுப்படும் அதே வேளையில், இத்தகைய விவகாரங்களை புத்திசாலித்தனத்துடனும் இரக்க உணர்வுடனும் கையாள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
பல இந்து கோயில்கள் நூற்றாண்டுகளாக செயல்பட்டு வருவதாகவும், அவை இந்திய சமூகத்தின் வரலாறும் ஆன்மீக வாழ்க்கையும் ஒன்றிணைந்த அடையாளங்களாக திகழ்வதாகவும் டாக்டர் அஸ்வின் கூறினார். ஆகையால், இவ்விவகாரத்தில் சமூக உணர்வுகளுக்கு உரிய மதிப்பளிக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
அனைத்து சமூகங்களின் இன மற்றும் மத உணர்வுகளுக்கும் மரியாதை அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட அவர், ஒருவரை ஒருவர் தாக்கி பேசுவதையும், தூண்டுதலான செயல்களில் ஈடுபடுவதையும் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். சமய விவகாரங்களை இனச் சர்ச்சைகளாக மாற்றக்கூடாது என்றும் அவர் எச்சரித்தார்.
மலேசியா பல இனங்களும் பல மதங்களும் இணைந்து துரித வளர்ச்சி அடைந்த நாடாக விளங்குகிறது. இத்தகைய சூழலில், வெறுப்பூட்டும் பேச்சுகள் மற்றும் இனத் தூண்டுதல் நாட்டின் அமைதிக்கும் ஒற்றுமைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் நினைவூட்டினார்.
கருத்து வேறுபாடுகள் பேச்சுவார்த்தை மற்றும் கலந்துரையாடல்களின் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்றும், வழிபாட்டு தலங்களைப் பற்றி குறிப்பிடும்போது மரியாதை மிக்க, பொறுப்பான மற்றும் முறையான சொற்களை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இத்தகைய விவகாரங்களில் அரசாங்க அதிகாரிகள், சமய அமைப்புகள் மற்றும் சமூகத் தலைவர்களுடன் முறையான கலந்துரையாடல்களை நடத்த வேண்டும் என ஆலோசனை கூறிய டாக்டர் அஸ்வின், நாடு அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் திகழ்வதை அனைவரும் உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
மலேசியர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் அனைத்து தரப்பினருடனும் ஒத்துழைக்க மலேசிய இந்திய மக்கள் கட்சி தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.















