அடுத்த ஆண்டு நாட்டில் பொதுத் தேர்தல் இல்லை – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டம்
கோலாலம்பூர், டிசம்பர் 18 –

அடுத்த ஆண்டு முன்கூட்டியே நாட்டில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான எந்தவொரு திட்டமும் இல்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெளிவுபடுத்தியுள்ளார்.
நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள சீர்திருத்தங்களை தொடர்ந்து வலுப்படுத்துவதும், மக்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கைச் செலவு உயர்வு தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதும் தான் தனது முதன்மை கவனமாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
“பொதுத் தேர்தலுக்கு இன்னும் நீண்ட காலம் உள்ளது. அதைப்பற்றி இப்போது நான் யோசிக்கவில்லை. அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதே நேரத்தில், அதிக வாழ்க்கைச் செலவு காரணமாக மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை குறைப்பதே தற்போதைய முக்கிய இலக்கு,” என அவர் கூறினார்.
நேற்று புத்ராஜெயாவில் உள்ள ஸ்ரீ பெர்டானா வளாகத்தில் மூத்த பத்திரிகையாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது பிரதமர் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.
இதனிடையே, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மலாக்கா மற்றும் ஜொகூர் மாநிலத் தேர்தல்களுடன் இணைத்து பொதுத் தேர்தலையும் நடத்த வேண்டும் என்ற சில தரப்பினரின் கோரிக்கைகள் எழுந்துள்ளன. எனினும், அந்த கோரிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பொதுத் தேர்தல் குறித்து தற்போது எந்தவொரு பரிசீலனையும் இல்லை என்று பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.
அரசின் தற்போதைய கவனம் முழுவதும் பொருளாதார மீட்பு, முதலீட்டு வளர்ச்சி, சமூக நலத் திட்டங்கள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த சீர்திருத்தங்களிலேயே உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.















