11 Nov 2025

மலேசிய இந்து சங்கத்தின் தேசிய தலைவர் ஸ்ரீ காசி சங்கபூஷன் தங்க கணேசன் அவர்கள், தகவல் தொழில்நுட்ப குழுவினருடன் இணைந்து சமூக ஊடகங்களில் செயல்படும் இந்திய சமூகத்தின் சில முக்கிய Influencers-களுடன் பயனுள்ள மற்றும் ஆழமான ஆலோசனைக் கலந்துரையாடலை நடத்தினார். சமீப காலங்களில் சமூக ஊடகங்களில் இந்து சமயத்தைச் சார்ந்த தவறான தகவல்கள், தேவையற்ற சர்ச்சைகள், மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலான பதிவுகள் அதிகரித்து வரும் சூழலில், இந்த சந்திப்பு மிகத் தேவையான மற்றும் சரியான நேரத்தில் நடந்த ஒன்றாக அமைந்தது.
சமூக நலனுக்காக அக்கறையுடன் செயல்படும் Influencers-களின் செயற்பாடுகளை மலேசிய இந்து சங்கம் மனப்பூர்வமாக பாராட்டுகிறது. சமூக ஊடகங்களில் சரியான தகவல்களைப் பகிர்ந்து, புரிதல் குறைபாடுகளை சரி செய்து, சமூக ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவது என்பது இன்றியமையாத பொறுப்பாகும் என்பதை இந்த சந்திப்பு வலியுறுத்தியது. குறிப்பாக, இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் தளங்களில் நல்ல வாசகத்தை, உண்மைத் தகவல்களை, மத ஒற்றுமையை ஊக்குவிக்கும் உள்ளடக்கங்களை அதிகரிப்பதே நோக்கமாகக் குறிப்பிடப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டம், எதிர்மறை உள்ளடக்கங்களை குறைக்கும் முன்வைத்து நடவடிக்கைகளின் தொடக்கமாக இருந்ததுடன், எதிர்காலத்தில் தொடர்ச்சியான கூட்டங்கள் மற்றும் பயிற்சி அமர்வுகள் மூலம் இந்திய சமூக ஊடக செயற்பாட்டாளர்களுடன் வலுவான ஒத்துழைப்பை உருவாக்கும் திட்டத்தையும் மலேசிய இந்து சங்கம் முன்வைத்துள்ளது.
இந்து சமயத்தின் பெருமையும் மரியாதையும் பாதுகாக்கப்படும் சூழலை உருவாக்குவது மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் நேர்மறையான, விழிப்புணர்வு நிறைந்த தகவல்களை வழங்கும் பணியில் மலேசிய இந்து சங்கம் முழு அர்ப்பணிப்புடனும் உறுதியுடனும் செயல்படும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியது.















