10.10.2026

ஜொகூர் பாரு: பத்தஞ்சலி அஷ்டாங்க யோகா பயிற்சி மையம் ஜொகூர் ஏற்பாட்டில், இரண்டாவது பதிப்பான ‘தி ஆர்ட் ஆஃப் யோகாசனா 2026’ பாரம்பரிய யோகாசனப் போட்டி, கடந்த அக்டோபர் 10ஆம் தேதி ஜொகூர், தேசா செமர்லாங் பல்நோக்கு மண்டபத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. மலேசியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த யோகா பயிற்சி நிலையங்களும் போட்டியாளர்களும் இதில் பங்கேற்றனர்.
பத்தஞ்சலி அஷ்டாங்க யோகா பயிற்சி மையம் ஜொகூர் மற்றும் ஜொகூர் மாநில பத்தஞ்சலி அஷ்டாங்க யோகாசனப் பயிற்சிச் சங்கம் இணைந்து, மாஸ்டர் தாமரைச்செல்வி சுகுமாரன் தலைமையில் இப்போட்டியை நடத்தின.
நிகழ்ச்சியின் முக்கிய அங்கமாகப் பாரம்பரிய யோகாசனப் போட்டி அமைந்தது. இது தொடக்கநிலை மற்றும் மேம்பட்ட நிலை ஆகிய இரு பிரிவுகளில் நடைபெற்றது. போட்டியாளர்கள் தங்களது சமநிலை, உடல் வலிமை, நெகிழ்வுத்தன்மை மற்றும் மன ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தினர்.
மேம்பட்ட நிலைப் பிரிவில் வெற்றி பெற்றவர்கள், ‘பத்தஞ்சலி சாம்பியன் ஆஃப் தி இயர் 2026’ பட்டத்திற்கான இறுதிச் சுற்றில் போட்டியிட்டனர்.
பெண்கள் பிரிவில் URRSHITA A/P GOPI சாம்பியன் பட்டத்தை வென்றார். TAMEERAA A/P SINNAPAN DASS இரண்டாம் இடத்தையும், SAMMANTHA DASS A/P SINNAPAN DASS @SINNAPPAN மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
ஆண்கள் பிரிவில் PRAVIN A/L SARAVANAN சாம்பியன் பட்டத்தை வென்றார். SRI HARISH SRINIVASAN இரண்டாம் இடத்தையும், DINESH A/L SANMUGAM மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
இவ்வாண்டு புதிதாக ஆட்டிசம் உள்ள குழந்தைகளுக்கான பிரிவு, மழலையர் யோகாசனத் திறன் நிகழ்ச்சி மற்றும் கலைநய யோகாசனம் ஆகிய மூன்று பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இவை குழந்தைகளின் தனித்திறன், தன்னம்பிக்கை மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்த வாய்ப்பளித்தன.
மழலையர் பிரிவு இளம் குழந்தைகளின் ஆர்வத்தையும் முயற்சியையும் கொண்டாடியது. கலைநய யோகாசனப் பிரிவில் இசையுடன் இணைந்த ஆசனத் தொடர்கள் படைப்பாற்றலுடன் அரங்கேற்றப்பட்டன. ஆட்டிசம் உள்ள குழந்தைகளுக்கான பிரிவு, ஒவ்வொரு குழந்தையின் முயற்சியையும் திறனையும் அங்கீகரிக்கும் மேடையாக அமைந்தது.
பல்வேறு மாநிலங்களிலிருந்து யோகா பயிற்சி நிலையங்களின் நிறுவனர்களும் அவர்களது மாணவர்களும் இப்போட்டியில் பங்கேற்றனர்.
அவர்களில், கெடா மாநிலம் சுங்கை பட்டாணியைச் சேர்ந்த Ashtangaa’s Yogaa Federation of Malaysia நிறுவனர் மற்றும் இயக்குநர் டாக்டர் அமுதா கெவரப்பன், Organisation Yoga with Barathi நிறுவனர் மாஸ்டர் திருமதி பாரதி மோகன், SahaZraa Yoga Shala நிறுவனர் மாஸ்டர் தினிஷியா தயானந்தன் ஆகியோர் இடம்பெற்றனர்.
மேலும், SEGA Intercontinental Yoga Alliance நிறுவனர் மற்றும் தலைவரும், UYSF துணைத் தலைவருமான பேராசிரியர் சேகர் குரு, Yatra Yoga Academy நிறுவனர் மாஸ்டர் மாலினி ஜெய், UPSM நிறுவனர் மாஸ்டர் திருமதி மல்லிகா ஆகியோரும் தங்களது மாணவர்களுடன் பங்கேற்றனர்.
இவர்களின் பங்கேற்பு, யோகா சமூகத்தினரிடையே ஒற்றுமை, பரஸ்பர ஆதரவு மற்றும் விளையாட்டுப் பண்பை வலுப்படுத்தியது.
வெற்றியாளர்களுக்கும் அனைத்து போட்டியாளர்களுக்கும் மாஸ்டர் தாமரைச்செல்வி வாழ்த்துகளைத் தெரிவித்தார். நிகழ்ச்சியின் வெற்றிக்குப் பங்களித்த யோகா பயிற்சி நிலையங்களின் நிறுவனர்கள், மாஸ்டர்கள், நடுவர்கள், பெற்றோர்கள், தன்னார்வலர்கள் மற்றும் ஏற்பாட்டுக் குழுவினருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
மாணவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும், போட்டி அனுபவத்தைப் பெறவும், தங்களது திறமைகளை வெளிப்படுத்தவும் வாய்ப்பளிப்பதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் என அவர் வலியுறுத்தினார்.
இளம் திறமைகளை வளர்த்தல், அனைவருக்கும் பங்கேற்பு வாய்ப்பளித்தல் மற்றும் மலேசியாவில் யோகாசனத் துறையின் வளர்ச்சிக்கு ஆதரவளித்தல் ஆகிய பணிகளைத் தொடர்ந்து முன்னெடுக்க ஏற்பாட்டாளர்கள் உறுதியளித்தனர்.
இந்நிகழ்ச்சி குறித்த தகவல்களை, Pertubuhan Patanjali Ashtangga Latihan Yogasana Negeri Johor அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவர், Patanjali Ashtangga Yoga Training Center, Johor மையத்தின் நிறுவனர் மற்றும் தலைமை யோகா ஆசிரியர் மாஸ்டர் தாமரைச்செல்வி சுகுமாரன் வழங்கினார்.















