கோலாலம்பூர், 14 அக்டோபர் 2026
பிரிக்ஃபீல்ட்ஸ் லிட்டில் இந்தியா நுழைவாயிலில் ‘DIWALI’ என்ற சொல்லுக்குப் பதிலாக ‘DEEPAVALI’ என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும் – டத்தோ தேனரசூ சுப்பையா வலியுறுத்தல்.
மலேசிய இந்தியர் சங்கங்களின் கூட்டமைப்பான Gabungan Persatuan-Persatuan India Malaysia (GAPPIN Malaysia), கோலாலம்பூர் பிரிக்ஃபீல்ட்ஸ் லிட்டில் இந்தியா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நுழைவாயிலில் இந்தியர்களின் ஒளித் திருநாளைக் குறிக்கும் வகையில் ‘DIWALI’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
மலேசியத் தமிழர்களின் மொழி, பாரம்பரியம், பண்பாட்டு அடையாளம் மற்றும் வரலாற்றுப் பின்னணிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அந்நுழைவாயிலில் ‘DIWALI’ என்பதற்குப் பதிலாக ‘DEEPAVALI’ (தீபாவளி) என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்று GAPPIN Malaysia வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், கலாசார மற்றும் சமய விழாக்களுக்கான பெயர்களைத் தேர்வு செய்யும்போது, அந்தந்தச் சமூகங்களின் வரலாறு, மொழி, அடையாளம் மற்றும் உணர்வுகளைக் கருத்தில் கொள்வது அவசியம் என GAPPIN Malaysia குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக, பிரிக்ஃபீல்ட்ஸ் லிட்டில் இந்தியா பகுதி மலேசிய இந்தியர்களின் வரலாறு, பாரம்பரியம் மற்றும் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளதுடன், தமிழ்ச் சமூகத்தின் அடையாளத்தையும் பிரதிபலிக்கும் முக்கியமான இடமாக விளங்குகிறது. எனவே, அப்பகுதியில் அமைக்கப்படும் அடையாளச் சின்னங்களில் பயன்படுத்தப்படும் சொற்கள், அங்கு வாழும் மற்றும் அந்தப் பகுதியுடன் வரலாற்றுத் தொடர்புடைய சமூகத்தின் எதிர்பார்ப்புகளையும் பிரதிபலிக்க வேண்டும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
‘தீபாவளி’ என்ற சொல்லே மலேசியத் தமிழர்களின் பாரம்பரியத்துடன் நெருக்கமானது!
மலேசியத் தமிழர்களிடையே ‘தீபாவளி’ என்ற சொல் நீண்டகாலமாகப் பயன்பாட்டில் இருந்து வருவதுடன், தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மரபுடன் ஆழமாக இணைந்துள்ளது. இந்நிலையில், லிட்டில் இந்தியா நுழைவாயிலில் ‘DIWALI’ என்ற சொல் இடம்பெற்றிருப்பது, உள்ளூர் தமிழ்ச் சமூகத்தின் மொழி மற்றும் பண்பாட்டு அடையாளத்திற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வியை எழுப்புவதாக GAPPIN Malaysia சுட்டிக்காட்டியுள்ளது.
அதேவேளையில், ‘Diwali’ என்ற சொல்லைப் பயன்படுத்தும் பிற இந்தியச் சமூகங்களின் பாரம்பரியத்தையோ, அவர்களின் கலாசார நடைமுறைகளையோ தாங்கள் கேள்விக்குட்படுத்தவில்லை என்றும் அந்த அமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது. இரண்டு சொற்களும் ஒளித் திருநாளுடன் தொடர்புடையவை என்றாலும், அவற்றின் பயன்பாடு மொழி, மரபு மற்றும் பண்பாட்டுச் சூழலுக்கு ஏற்ப மாறுபடுவதாகவும் தெரிவித்துள்ளது.
இருப்பினும், தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றுத் தொடர்பும் பண்பாட்டு அடையாளமும் வலுவாகப் பிரதிபலிக்கும் லிட்டில் இந்தியா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நுழைவாயிலில், அச்சமூகத்தின் மொழி மரபுக்கு நெருக்கமான சொல்லைப் பயன்படுத்துவது உரிய மரியாதையாக அமையும் என GAPPIN Malaysia வலியுறுத்தியுள்ளது.
‘DEEPAVALI’ என மாற்ற வேண்டும் – அதிகாரிகளுக்கு வேண்டுகோள்
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் பொறுப்பான அரசாங்க அமைப்புகளும் தலையிட்டு, தற்போதைய முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என GAPPIN Malaysia கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், நுழைவாயிலில் இடம்பெற்றுள்ள ‘DIWALI’ என்ற சொல்லை ‘DEEPAVALI’ என மாற்றுவதுடன், எதிர்காலத்தில் இந்தியச் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அடையாளச் சின்னங்கள், அறிவிப்புப் பலகைகள் மற்றும் அதிகாரபூர்வ அலங்காரங்களை அமைப்பதற்கு முன்பாக இந்தியர் சங்கங்கள், தமிழ்ப் பண்பாட்டு அமைப்புகள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
சமூகங்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அவர்களின் கருத்துகளுக்குச் செவிசாய்த்து, தேவையான திருத்தங்களை வெளிப்படையாகவும் பொறுப்புடனும் மேற்கொள்வதன் மூலமே உண்மையான பண்பாட்டு நல்லிணக்கத்தை உருவாக்க முடியும் என அந்த அமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
மொழியும் பண்பாடும் சமூகத்தின் அடையாளம்!
ஒரு நுழைவாயிலில் இடம்பெறும் சொல் என்பது வெறும் எழுத்துகளின் தொகுப்பு மட்டுமல்ல. அது ஒரு சமூகத்தின் வரலாறு, மொழி, மரியாதை மற்றும் உரிமை உணர்வைப் பிரதிபலிக்கக்கூடியது என்பதை GAPPIN Malaysia தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.
எனவே, இந்த விவகாரத்தைச் சம்பந்தப்பட்ட தரப்பினர் சுமுகமான பேச்சுவார்த்தை மற்றும் பரஸ்பரப் புரிதலின் மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், மலேசியாவின் பன்முகச் சமூகத்தில் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் பாதுகாக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த அறிக்கையை GAPPIN Malaysia தலைவர் டத்தோ தேனரசூ சுப்பையா வெளியிட்டுள்ளார்.
GABUNGAN PERSATUAN-PERSATUAN INDIA MALAYSIA (GAPPIN MALAYSIA)















