கோலாலம்பூர், அக். 10 —

மடானி 2027 வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் மானியங்கள், உதவிகள் மற்றும் ஊக்குவிப்புகளுக்காக 80 பில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதன் பலன்களை இந்தியச் சமுதாயமும் பெற்றுக்கொள்ளும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் தெரிவித்தார்.
மேலும், இந்தியச் சமுதாயத்தின் கல்வி, தொழில்முனைவு மற்றும் சமூகப் பொருளாதார மேம்பாட்டை வலுப்படுத்தும் வகையில் மித்ராவுக்கு 150 மில்லியன் ரிங்கிட், தெக்குன் மற்றும் அமானா இக்தியார் மலேசியா (ஏ.ஐ.எம்) மூலம் இந்தியத் தொழில்முனைவோருக்கான நிதியுதவியாக 150 மில்லியன் ரிங்கிட், தமிழ்ப்பள்ளிகளுக்கு 50 மில்லியன் ரிங்கிட் எனப் பல்வேறு திட்டங்களின் மூலம் குறிப்பிடத்தக்க நிதி ஆதரவு வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தாக்கல் செய்த மடானி 2027 வரவுசெலவுத் திட்டம், இந்தியச் சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொண்டு, அவற்றைத் தெளிவான கொள்கைகள், நிதி ஒதுக்கீடுகள் மற்றும் பொருளாதார வாய்ப்புகள் மூலம் நிறைவேற்றுவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாக ரமணன் வர்ணித்தார்.
மடானி அரசாங்கத்தின் உறுதிப்பாடு மித்ராவுக்கு வழங்கப்படும் ஒதுக்கீட்டுடன் மட்டும் நின்றுவிடவில்லை என்று குறிப்பிட்ட அவர், கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்முனைவு, வருமான உயர்வு மற்றும் சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட தேசிய அளவிலான பல்வேறு திட்டங்களின் வாயிலாகவும் இந்தியச் சமுதாயம் பயனடைவதை உறுதிசெய்வதே அரசாங்கத்தின் நோக்கம் என்றார்.
பிரதமர் அன்வார் இப்ராஹிமின் தலைமையிலான மடானி அரசாங்கத்தின் அணுகுமுறை, ஒவ்வொரு சமூகமும் நாட்டின் வளர்ச்சியில் பங்கெடுத்து, அதன் பலன்களைச் சமமாக அனுபவிக்க வேண்டும் என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
திருக்குறளுக்கு அங்கீகாரம்
தமிழ் இலக்கியத்தின் பெருமையை எடுத்துரைத்த ரமணன், பிரதமர் அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் திருக்குறளின் 731-வது குறளை மேற்கோள் காட்டியதைப் பாராட்டினார்.
“தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு” என்ற குறள், தமிழ் மொழியின் அறிவுச் செல்வத்திற்கும் பாரம்பரியத்திற்கும் வழங்கப்பட்டுள்ள முக்கியமான அங்கீகாரம் என்று அவர் குறிப்பிட்டார்.
குறையாத விளைச்சல், தகுதியும் திறமையும் கொண்ட மக்கள், குறைவில்லாத செல்வம் ஆகியவற்றைக் கொண்டதே சிறந்த நாடு என்ற வள்ளுவரின் சிந்தனை, வளர்ச்சியடைந்த, நீதியான மற்றும் வளமான நாட்டை உருவாக்கும் மடானி பொருளாதாரக் கொள்கையின் நோக்கத்துடன் பொருந்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழ்ப்பள்ளிகளுக்கும் மாணவர்களுக்கும் ஆதரவு
கல்வித் துறையைப் பொறுத்தவரையில், ஜோகூர் மாநிலம் குளுவாங்கில் உள்ள பாமோல் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் மறுசீரமைப்பு மற்றும் புதிய கட்டடத் திட்டம், நாடு முழுவதும் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் பராமரிப்புக்காக 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு ஆகியவற்றை ரமணன் வரவேற்றார்.
குறிப்பாக, கிராமப்புறங்களிலும் தோட்டப்புறங்களிலும் வாழும் இந்தியச் சமுதாயக் குழந்தைகள் பாதுகாப்பான, வசதியான மற்றும் தரமான கல்விச் சூழலைப் பெறுவதை உறுதிசெய்ய இத்தகைய நடவடிக்கைகள் அவசியமானவை என்று அவர் வலியுறுத்தினார்.
ஒவ்வொரு மாணவருக்கும் வழங்கப்படும் 200 ரிங்கிட் பள்ளி தொடக்க உதவி, படிவம் ஆறில் பயிலும் மாணவர்களுக்கான மொத்தம் 2,500 ரிங்கிட் வாழ்வாதார உதவி மற்றும் தேசிய உயர் கல்வி நிதிக் கழகமான பி.டி.பி.டி.என். கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் வழங்கப்படும் சலுகைகள் ஆகியவை குடும்பங்களின் நிதிச் சுமையைக் குறைக்க உதவும் என்றும் அவர் கூறினார்.
வறுமைச் சுழற்சியை உடைப்பதற்கான மிகச் சிறந்த வழிகளில் கல்வியும் ஒன்று எனக் குறிப்பிட்ட ரமணன், கல்விக்கான நிதிச் சுமையைக் குறைத்து, பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதன் மூலம் அடுத்த தலைமுறையினருக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்றார்.
இந்தியத் தொழில்முனைவோருக்கு நிதியுதவி
இந்தியச் சமுதாயத்தின் பொருளாதார வலிமையை மேம்படுத்தும் நோக்கில், மித்ராவுக்கு 150 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், தெக்குன் மற்றும் ஏ.ஐ.எம் மூலம் இந்தியத் தொழில்முனைவோருக்கான நிதியுதவியும் 150 மில்லியன் ரிங்கிட் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் இந்தியச் சமுதாயத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் தொழில்முனைவுத் திறனை மேம்படுத்துவதற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான ரமணன் தெரிவித்தார்.
மித்ரா மூலம் கல்வி மேம்பாடு, திறன் பயிற்சி, வேலைவாய்ப்பு மற்றும் சமூக வலுவூட்டல் திட்டங்களுக்கு வாய்ப்புகள் விரிவடையும் என்றும், தெக்குன் மற்றும் ஏ.ஐ.எம். வழங்கும் நிதியுதவிகள் சிறு வணிகர்கள், அங்காடி வியாபாரிகள் மற்றும் பெண் தொழில்முனைவோர் தங்களது தொழில்களை விரிவுபடுத்த உதவும் என்றும் அவர் விளக்கினார்.
இந்தியச் சமுதாயத்தின் மேம்பாட்டை மித்ராவின் திட்டங்கள் மூலம் மட்டுமே மதிப்பிடக் கூடாது என்றும், பல்வேறு அமைச்சகங்கள், அரசாங்க முகமைகள் மற்றும் தேசிய அளவிலான திட்டங்கள் வழங்கும் வாய்ப்புகளையும் சமுதாயத்தினர் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
திறன் பயிற்சியும் வேலைவாய்ப்பும்
தொழில்துறை தானியங்கி முறை, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் விமானப் பராமரிப்பு உள்ளிட்ட துறைகளில் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்விப் பயிற்சிகளை (திவெட்) விரிவுபடுத்துவது, இந்திய இளைஞர்கள் உட்பட மலேசிய இளைஞர்கள் உயர் வருமானம் ஈட்டக்கூடிய திறன்மிக்க பணியாளர்களாக உருவாக உதவும் என்று ரமணன் தெரிவித்தார்.
வேலைவாய்ப்பையும் தொழிலாளர் நலனையும் மேம்படுத்தும் நோக்கில், 2027 ஜூன் முதல் குறைந்தபட்ச ஊதியத்தை 2,000 ரிங்கிட் ஆக உயர்த்தும் நடவடிக்கையையும் அவர் வரவேற்றார்.
மேலும், பகுதி திறன் பெற்ற பணியாளர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கான 2,500 ரிங்கிட் ஊதிய அளவுகோல், கிக் தொழிலாளர்களின் வருமானம் மற்றும் நலனை மேம்படுத்துவதற்காக அரசாங்கமும் கிரெப் நிறுவனமும் இணைந்து செயல்படுத்தவுள்ள 160 மில்லியன் ரிங்கிட் திட்டம் ஆகியவை தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவும் என்றார்.
தகுதியுள்ள சுயதொழில் செய்வோருக்கும் கட்டாயமற்ற 17 துறைகளில் பணியாற்றுவோருக்கும் பெர்கேசோ பங்களிப்பில் 70 விழுக்காடு இணைப் பங்களிப்பு ஊக்கத்தொகை வழங்கப்படுவது, சமூகப் பாதுகாப்பின் வரம்பை விரிவுபடுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த ஊதியக் கொள்கைகள், திறன் பயிற்சிகள் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் மூலம் இந்தியத் தொழிலாளர்கள் உட்பட அனைத்து மலேசியர்களும் பயனடைய முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பொருளாதார வளர்ச்சியை வெறும் புள்ளிவிவரங்கள் அல்லது முதலீடுகளைக் கொண்டு மட்டும் மதிப்பிட முடியாது என்று குறிப்பிட்ட ரமணன், தொழிலாளர்கள் சிறந்த வருமானத்தைப் பெறுவதும், குடும்பங்கள் நிம்மதியாக வாழ்வதும், குழந்தைகளுக்குச் சிறந்த எதிர்காலம் உருவாவதுமே உண்மையான பொருளாதார முன்னேற்றத்தின் அடையாளங்கள் என்றார்.
இறுதியாக, அனைத்து மலேசியர்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியை முன்னெடுத்து, இந்தியச் சமுதாயத்தின் நலனுக்கும் முன்னேற்றத்திற்கும் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வரும் பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு ரமணன் நன்றி தெரிவித்தார்.
மலேசியாவை வளமான, நீதியான மற்றும் அமைதியான நாடாக உருவாக்கும் மடானி அரசாங்கத்தின் முயற்சிகளில் இந்தியச் சமுதாயமும் பங்கெடுத்து, அதன் வளர்ச்சிப் பலன்களை முழுமையாகப் பெறுவதை உறுதிசெய்வது முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.















