தேதி: 7 ஆகஸ்ட் 2026 மெலாக்கா:

மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மெலாக்காவிலுள்ள கெம் தெரெண்டாக் (Kem Terendak) இராணுவ முகாமிற்கு மேற்கொண்ட பணிப்பயணத்தின் போது, அங்கு முன்னெடுக்கப்பட்டு வரும் துப்பாக்கிச் சுடும் பயிற்சி மைதான மேம்பாட்டுத் திட்டம் மற்றும் புதிய மலேசிய ஆயுதப்படை (ATM) மருத்துவமனை கட்டுமானத் திட்டத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நிறைவடையும் என அதிகாரிகள் பிரதமருக்கு விளக்கமளித்தனர். இந்த புதிய மருத்துவமனை செயல்பாட்டிற்கு வந்த பிறகு, ஆயுதப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு விரைவான, தரமான மற்றும் வசதியான மருத்துவ சேவைகளை வழங்கும் முக்கிய மையமாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை, மேம்படுத்தப்பட்ட துப்பாக்கிச் சுடும் பயிற்சி மைதானம், பாதுகாப்பு வீரர்களுக்கு நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய பாதுகாப்பான மற்றும் தரமான பயிற்சி சூழலை உருவாக்கி, அவர்களின் செயல்திறன் மற்றும் போர்த் தயார்நிலையை மேலும் உயர்த்தும் என பிரதமர் குறிப்பிட்டார்.
பின்னர் நடைபெற்ற “செமாராக் கெனெகாரான்” (Program Semarak Kenegaraan) நிகழ்ச்சியில் கெம் தெரெண்டாக் ராணுவ முகாம் அதிகாரிகள், வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் பிரதமர் அன்வார் இப்ராஹிம் கலந்துரையாடி, அவர்களின் நலன்கள் குறித்து அக்கறையுடன் கேட்டறிந்தார்.
அப்போது உரையாற்றிய அவர், ஒரு நாட்டின் வலிமை என்பது அதன் இராணுவ திறனில் மட்டும் இல்லாமல், குடிமக்களின் தேசப்பற்று, ஒற்றுமை மற்றும் நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் மனப்பான்மையிலும் அடங்கியுள்ளது என்று வலியுறுத்தினார்.
மேலும், MADANI அரசாங்கம் நாட்டின் பாதுகாப்புத் திறனை தொடர்ந்து வலுப்படுத்த உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்த பிரதமர், வரவிருக்கும் 2027 தேசிய வரவுசெலவுத் திட்டத்தில் (Belanjawan 2027), ஆயுதப்படை நவீனமயமாக்கல், பாதுகாப்பு உள்கட்டமைப்பு மேம்பாடு, இராணுவத்தின் தயார்நிலை உயர்வு மற்றும் நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கும் வீரர்களின் நலனுக்கான ஒதுக்கீடுகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இந்தப் பயணம், தேசிய பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதோடு, ஆயுதப்படை வீரர்களின் நலன் மற்றும் நாட்டின் பாதுகாப்பு அமைப்பை நவீனமயமாக்கும் அரசாங்கத்தின் உறுதியை வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.















