13th September 2026

மலேசியாவின் கோலாலம்பூர் தாமான் தாசிக் தித்திவாங்சாவில் செப்டம்பர் 11 முதல் 16ஆம் தேதி வரை Kondattam SRFA 2026எனும் ஆறு நாள் பிரமாண்ட இந்தியக் கலை மற்றும் பண்பாட்டு விழா நடைபெறுகிறது. இது Festival Budaya Malaysia 2026ன் ஒரு பகுதியாக இடம்பெறுகிறது.
இவ்விழாவிற்கு Datuk Seri G. Gnanaraja அவர்களுக்கு சிறப்பான கௌரவ வரவேற்பு வழங்கப்படுவது மேலும் ஒரு சிறப்பம்சமாக அமைகிறது. அவரின் வருகை விழாவிற்கு கூடுதல் சிறப்பையும் சமூக முக்கியத்துவத்தையும் ஏற்படுத்துகிறது.
இந்த விழாவின் முக்கிய நோக்கம், இந்தியர்களின் பாரம்பரியக் கலை, இசை, நடனம், உணவு, உடை மற்றும் கலாச்சார மரபுகளை அடுத்த தலைமுறையினருக்கும் மலேசியாவின் பல இன மக்களுக்கும் அறிமுகப்படுத்தி, பாதுகாத்து வளர்ப்பதாகும்.
விழாவில் செவ்வியல் மற்றும் நாட்டுப்புற நடனங்கள், பாரம்பரிய இசை, கலைக் கண்காட்சிகள், சமையல் பாரம்பரியம், ஃபேஷன் நிகழ்ச்சிகள், கலாச்சார அணிவகுப்புகள், நேரடி கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.
இந்த விழாவின் மற்றொரு முக்கிய சிறப்பு, இந்திய நாட்டுப்புறக் கலை மற்றும் கலாச்சாரத்தை மையமாகக் கொண்ட மிகப்பெரிய பங்கேற்பு நிகழ்வுகள் மற்றும் சாதனை முயற்சிகள் ஆகும்.
மேலும், நம்ம நாட்டு கல்யாணம் என்ற பெயரில் முழுமையான ஆதரவுடன் பாரம்பரிய திருமண நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பொருளாதார சிரமங்களை எதிர்கொள்ளும் குடும்பங்களுக்கு சமூக ஆதரவு வழங்கப்படுகிறது.
இது ஒரு சாதாரண கலை நிகழ்ச்சி மட்டுமல்ல. மலேசிய இந்திய சமூகத்தின் பண்பாட்டு அடையாளத்தை வெளிப்படுத்தும் ஒரு பெரிய சமூக விழா. குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் தங்கள் பாரம்பரியத்தை நேரடியாகக் கற்றுக்கொள்ளவும், பல்வேறு இன மக்களுடன் கலாச்சாரப் பரிமாற்றத்தை ஏற்படுத்தவும் இந்த விழா ஒரு சிறந்த தளமாக அமைகிறது.
News by Punitha NOM















