அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சமமான ஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்ய சிறப்புச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என ஜசெக தேசியத் தலைவர் கோபிந்த் சிங் டியோ அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

கோலாலம்பூர், ஆகஸ்ட் 18, 2026 —

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சமமான நிதி ஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், தெளிவான சட்ட ஏற்பாடு கொண்டுவரப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சீர்திருத்தங்கள் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படுவதுடன், எந்த அரசாங்கம் ஆட்சியில் இருக்கிறது என்பதையும், அந்த அரசாங்கத்தின் விருப்பத்தையும் சார்ந்ததாக இருக்கக் கூடாது என கோபிந்த் சிங் டியோ குறிப்பிட்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கெஅடிலான் தேசிய மாநாட்டில் பிரதமர் டத்தோ’ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் வெளியிட்ட அறிவிப்பு குறித்து கருத்து தெரிவிக்குமாறு கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.

“இது வெறும் அரசாங்கத்தின் சீர்திருத்தமாக இருக்கக் கூடாது. நிரந்தரமான சீர்திருத்தமாக இருக்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம்,” என அவர் தெரிவித்தார்.

அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒதுக்கீட்டு முறையில் பாகுபாடு ஏற்படாத வகையில், சட்டத்தின் மூலம் உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சி என வேறுபாடு பார்க்காமல், மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சமமான முறையில் ஒதுக்கீடு வழங்கப்படுவது ஜனநாயக நடைமுறையை மேலும் வலுப்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டினார்.

இத்தகைய சட்டரீதியான சீர்திருத்தம் நடைமுறைக்கு வந்தால், எதிர்கால அரசாங்கங்களின் அரசியல் முடிவுகளுக்கு அப்பாற்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒதுக்கீடு தொடர்பான நிலையான கொள்கையை உறுதி செய்ய முடியும் என அவர் தெரிவித்தார்.

கோலாலம்பூர் நகரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கோபிந்த் சிங் டியோ, இந்த விவகாரம் தொடர்பில் நீடித்த மற்றும் வெளிப்படையான தீர்வை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *