
மலேசியாவுக்குப் பெருமை சேர்க்கும் வகையில், கோலாலம்பூர் SMK Seri Bintang Selatan பள்ளி மாணவி மிஷலீன், இங்கிலாந்தில் நடைபெற்ற TeenEagle Global Finals 2026 சர்வதேச இறுதிப்போட்டியில் Overall TE2 Champion பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

16 நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 306 மாணவர்கள் பங்கேற்ற இந்த சர்வதேசப் போட்டியில், கல்வி, மொழித்திறன், தொடர்புத்திறன், சிந்தனைத்திறன் மற்றும் கலைத்திறன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மாணவர்களின் திறமைகள் சோதிக்கப்பட்டன.

மிஷலீனின் இந்த வெற்றிப் பயணம் மலேசியாவில் நடைபெற்ற TeenEagle Online Qualifiers போட்டியிலிருந்து தொடங்கியது. இதில் நாடு முழுவதும் 1,015 மாணவர்கள் பங்கேற்றனர்.

அதனைத் தொடர்ந்து, கோலாலம்பூரில் உள்ள British International School of Kuala Lumpur (BSKL) வளாகத்தில் நடைபெற்ற Malaysia Regional Round போட்டியில் 410 மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்ற 30 மலேசிய மாணவர்கள் இங்கிலாந்தில் நடைபெற்ற Global Finals போட்டியில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தினர்.
இங்கிலாந்தில் நடைபெற்ற இறுதிச்சுற்றுப் போட்டி காலத்தில் மிஷலீன் உட்பட மலேசிய மாணவர்கள் Brunel University London-ல் தங்கியிருந்து போட்டிகளில் பங்கேற்றனர். இதன் மூலம் சர்வதேச மாணவர்களுடன் இணைந்து செயல்படுவதோடு, பல்கலைக்கழக வளாக வாழ்க்கையையும் அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.
TE2 பிரிவில் மலேசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய மிஷலீன், பல்வேறு போட்டிப் பிரிவுகளில் தொடர்ந்து சிறப்பான முடிவுகளைப் பதிவு செய்தார்.
Resource Based Knowledge Quiz மற்றும் Spelling Bee ஆகிய பிரிவுகளின் ஒருங்கிணைந்த போட்டியில் அவர் Gold Award பெற்றார். தொடர்ந்து Debate மற்றும் Writing Skills பிரிவுகளின் ஒருங்கிணைந்த போட்டியிலும் மற்றொரு Gold Award-ஐ வென்றார். மேலும், Spelling Bee பிரிவிலும் தனிப்பட்ட விருதை பெற்றார்.
கல்வித் திறமையுடன் மட்டுமின்றி, கலைத்துறையிலும் தனது திறமையை வெளிப்படுத்திய மிஷலீன், இந்தியாவின் பாரம்பரிய செவ்வியல் நடனமான கதக் (Kathak) நடனத்தை Talent Show பிரிவில் அரங்கேற்றினார்.
தனது முதல் சர்வதேச தனிநபர் கதக் நிகழ்ச்சியிலேயே அவர் மூன்றாம் இடத்தை பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
கல்வி, அறிவாற்றல், விவாதம், எழுத்துத்திறன், ஆங்கில மொழித்திறன், மேடைத் தன்னம்பிக்கை மற்றும் கலைத்திறன் என பல்வேறு துறைகளில் வெளிப்படுத்திய தொடர்ச்சியான சிறப்பான செயல்பாடுகளின் அடிப்படையில், மிஷலீன் TeenEagle Global Finals 2026 Overall TE2 Champion என்ற உயரிய பட்டத்தை வென்றார்.
இந்த சர்வதேசப் போட்டியின் நிறைவு மற்றும் விருது வழங்கும் விழா இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டில் உள்ள St Edward’s School-ல் நடைபெற்றது. இதில் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
மிஷலீனின் இந்த வெற்றி அவரது பெற்றோர், பள்ளி, ஆசிரியர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த மலேசியாவுக்கும் பெருமை சேர்க்கும் சாதனையாக அமைந்துள்ளது.
ஒரே போட்டியில் கல்வித் திறமையையும் கலைத்திறமையையும் ஒருங்கிணைத்து சர்வதேச அரங்கில் தன்னை நிரூபித்துள்ள மிஷலீன், மலேசிய இளம் தலைமுறையின் திறமைக்கு மேலும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறார்.
மலேசியக் கொடியை சர்வதேச அரங்கில் உயர்த்திய மிஷலீனுக்கு வாழ்த்துகள்.















