நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஹராப்பான் ஆட்சியை தொடர மக்களிடம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வேண்டுகோள்

23 ஜூலை 2026

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலை முன்னிட்டு, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று இரவு தாமான் ஸ்ரீ பெனாகாவிற்கு வருகை தந்து, லிங்கி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் டத்தோஸ்ரீ அமினுடின் ஹரூன் மற்றும் சிக்காமாட் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் ஹராப்பான் வேட்பாளர் அஸ்மான் முகமட் ஆகியோருக்கு ஆதரவு தெரிவித்து தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், நெகிரி செம்பிலான் மாநிலம் டத்தோஸ்ரீ அமினுடின் ஹரூன் தலைமையில் சுத்தமான, வெளிப்படையான, பொறுப்புமிக்க மற்றும் மக்கள் நலனை மையமாகக் கொண்ட நிர்வாகத்தை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டார். மத்திய அரசின் ஒத்துழைப்புடன் மாநில அரசு பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, மாநில வரலாற்றிலேயே அதிகளவிலான முதலீடுகளை ஈர்த்திருப்பது, மாநில வருவாய் உயர்வு, சாலைகள், பொதுமக்கள் பயன்பாட்டு வசதிகள் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்புகளில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாடுகள் ஆகியவை ஹராப்பான் அரசின் திறமையான நிர்வாகத்திற்கு சான்றாக இருப்பதாக பிரதமர் கூறினார்.

மேலும், பல ஆண்டுகளாக நிலவி வந்த மலிவு விலை வீட்டு வசதி, நில உரிமை உள்ளிட்ட மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு மாநில அரசு தீர்வு காணும் முயற்சிகளில் வெற்றி பெற்றுள்ளதாகவும் அவர் பாராட்டினார்.

வரவிருக்கும் மாநிலத் தேர்தலில் வாக்களிக்கும் மக்கள், அரசியல் வாக்குறுதிகளை விட வேட்பாளர்களின் சேவைப் பதிவு, செயல்திறன், நேர்மை மற்றும் மக்கள் நலப் பணிகளை அடிப்படையாகக் கொண்டு தங்களது முடிவை எடுக்க வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்.

ஹராப்பான் கூட்டணி மீண்டும் மக்களின் வலுவான ஆதரவைப் பெற்றால், நெகிரி செம்பிலானின் வளர்ச்சிப் பயணம் தொடர்ந்து முன்னேறும் என்றும், சுத்தமான, பொறுப்பான, வெளிப்படையான மற்றும் உயர்ந்த நேர்மையுடைய நிர்வாகத்தின் மூலம் அனைத்து மக்களுக்கும் சிறந்த சேவையை வழங்க உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஹராப்பான் கூட்டணியின் தலைவர்கள், தேர்தல் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு வேட்பாளர்களுக்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *