ஷா ஆலம் | 9 ஜூலை 2026

மலேசியாவில் பெண்களின் உடல்நலம், சமூக ஒற்றுமை மற்றும் பாரம்பரிய பண்பாட்டை ஒருங்கிணைக்கும் வகையில், மலேசியா பெல் தமிழர் கழகம் (Kelab Bell Tamil Malaysia) ஏற்பாட்டில் “மெர்டேக்கா தொண்டு நடைப்பயணம் – புடவையணிந்த பெண்களுக்கான நடைப்பயணம்” (Walkathon for Ladies in Saree) என்ற வித்தியாசமான நிகழ்வு, வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஷா ஆலமில் சிறப்பாக நடைபெறவுள்ளது.
இந்த நடைப்பயணம், ஷா ஆலம், செக்ஷன் 17-இல் அமைந்துள்ள JKR விளையாட்டு அரங்கில், காலை 6.30 மணி முதல் 9.30 மணி வரை நடைபெறும். இதில் அனைத்து இன, மத மற்றும் பின்னணியைச் சேர்ந்த பெண்களும் புடவையணிந்து கலந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளனர்.
நிகழ்வில் 2 கிலோமீட்டர் மற்றும் 4 கிலோமீட்டர் என இரண்டு பிரிவுகளில் நடைப்பயணம் நடைபெறும். மேலும், 18–35 வயது, 36–55 வயது, 56–75 வயது என மூன்று வயது பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றியாளர்களுக்கு ரொக்கப் பரிசு, பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.
அதேவேளை, முதலாவதாக பதிவு செய்யும் 100 பெண்களுக்கு நினைவுப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
நடைப்பயணத்துடன் இணைந்து இரத்ததான முகாம், இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை, உடல் நிறை குறியீடு (BMI) பரிசோதனைகள், யோகா, ஜும்பா உடற்பயிற்சி நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு ஆரோக்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வு, பெண்களிடையே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதோடு, தமிழர் பாரம்பரிய உடையான புடவையின் அழகையும் மரபையும் அனைத்து சமூகத்தினரிடமும் எடுத்துரைப்பதையும், அதேசமயம் மெர்டேக்கா கொண்டாட்டத்தின் ஒற்றுமை உணர்வை வலுப்படுத்துவதையும், தொண்டு மனப்பான்மையை வளர்ப்பதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
பெண்கள், குடும்பங்கள் மற்றும் சமூக அமைப்புகள் பெருமளவில் பங்கேற்று இந்நிகழ்வை வெற்றியடையச் செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர் ஜூலை 25, 2026-க்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு கட்டணம் ஒருவருக்கு RM25 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த மெர்டேக்கா நடைப்பயணம், பெண்களின் உடல்நலம், பாரம்பரிய உடை, சமூக ஒற்றுமை மற்றும் தொண்டு சேவை ஆகிய நான்கு முக்கிய அம்சங்களையும் ஒரே மேடையில் இணைக்கும் தனித்துவமான நிகழ்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.















