“மியாவா” (MIEWA) 10ஆம் ஆண்டு பெற்றோர் தின விழா – கலை, பண்பாடு, பெற்றோர் பெருமையைப் போற்றிய மறக்க முடியாத நிகழ்வு

கோலாலம்பூர், 7 ஜூலை

 மலேசிய இந்திய கலை எழுத்தாளர் அமைப்பான MIEWA (மியாவா) தனது 10ஆம் ஆண்டு பெற்றோர் தின விழாவை அண்மையில் வெகுவிமரிசையாகவும் சிறப்பாகவும் நடத்தி, கலை உலகினரின் பாராட்டைப் பெற்றது.

திட்டமிட்ட நிர்வாகம், நேர்த்தியான நிகழ்ச்சி ஒழுங்கமைப்பு, உயர்தர கலை நிகழ்ச்சிகள் ஆகியவை இந்த விழாவின் வெற்றிக்கு வலுவான அடித்தளமாக அமைந்தன. தொடக்கம் முதல் நிறைவு வரை பார்வையாளர்களை ஈர்த்த இந்நிகழ்ச்சி, பெற்றோரைப் போற்றும் உயரிய பண்பாட்டு விழாவாக அமைந்தது.

நிகழ்ச்சியில் இடம்பெற்ற பாடல்கள் மிகச் சிறப்பாகத் தேர்வு செய்யப்பட்டிருந்தன. பாடகர்களின் இனிமையான குரலும், டாக்டர் புருஷோத்தமன் வழங்கிய இசைக்கோர்வையும் நிகழ்ச்சிக்கு தனிச்சிறப்பைச் சேர்த்தன. நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆனந்தா தனது கலகலப்பான அறிவிப்பாலும் துள்ளலான மேடை நடத்தையாலும் அனைவரின் பாராட்டையும் பெற்றார். ஒலி அமைப்பும் மிகத் தரமாக அமைந்து, அரங்கம் முழுவதும் இனிய இசை அனுபவத்தை ஏற்படுத்தியது.

பெற்றோரைப் போற்றும் பண்பாட்டுச் செய்தியை இன்றைய தலைமுறைக்கு வலியுறுத்திய இந்த விழா, சமூகப் பொறுப்புணர்வை எடுத்துரைத்தது. மேலும், மூத்த கலைஞர் சத்யா அவர்களுக்கு வழங்கப்பட்ட அன்பும் மரியாதையும் அனைவரின் மனதையும் நெகிழச்செய்தது.

விழாவின் உச்சக்கட்ட நிகழ்வாக மூன்று சிறந்த கலைஞர்கள் வாழ்நாள் சாதனையாளர்களாக சிறப்பிக்கப்பட்டனர்.

அவர்களில், டி.எம்.எஸ். புகழ் சிவகுரு, மறைந்த பின்னணிப் பாடகர் டி. எம். சௌந்தரராஜன் அவர்களால் “சிவகுருநாதா” என அன்புடன் அழைக்கப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், நாடக உலகில் “சிபி” என அறியப்படும் சிதம்பரம், கர்ணன் கதாபாத்திரத்தில் வெளிப்படுத்திய அபாரமான நடிப்பிற்காக, மறைந்த கலை நாயகன் சாமிவேலு அவர்கள் “என் நண்பன் சிவாஜி கணேசன் உயிர்த்தெழுந்து வந்துவிட்டார்” என்று பாராட்டிய நிகழ்வு மீண்டும் நினைவுகூரப்பட்டது.

மூன்றாவது கலைஞராக அக்கா பாலாமணி, தமிழ் பள்ளிப் பருவம் முதலே வானொலி நாடகங்களில் தனது கலைப் பயணத்தைத் தொடங்கி, வாழ்க்கையின் சவால்களைச் சாதனைகளாக மாற்றி, குரல் நடிப்பின் மூலம் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர் என்பதற்காக கௌரவிக்கப்பட்டார்.

இந்த மூவரையும் உணர்வுபூர்வமாகவும் வரலாற்றுப் பின்னணியுடனும் அறிமுகப்படுத்திய குணா அவர்களின் தொகுப்பு அனைவரின் பாராட்டையும் பெற்றது.

மேலும், The Great & Gold Dancers குழுவினரின் உற்சாகமான நடன நிகழ்ச்சிகளுடன், பீஷ்மர் சங்கரத்னா புகழ் சோ பரஞ்சோதி அவர்களின் மேடை நிகழ்ச்சியும் ரசிகர்களின் பெரும் கைதட்டலைப் பெற்றது.

நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது தலைவர் சுகன் பஞ்சா அவர்களின் தொலைநோக்கு தலைமைத்துவமும், அவரின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படும் அர்ப்பணிப்புமிக்க நிர்வாகக் குழுவின் ஒருங்கிணைந்த பணியுமாகும்.

1980களின் தொடக்கத்தில் மலேசியத் தமிழர்களுக்கான தொலைக்காட்சி நாடக வளர்ச்சியில் புதிய அத்தியாயத்தை உருவாக்கிய படைப்பாற்றல், பின்னர் மலேசிய தமிழ் சின்னத்திரை மற்றும் திரைப்பட வளர்ச்சிக்கான உறுதியான அடித்தளமாக அமைந்தது. அந்தக் கலைப்பணியின் தொடர்ச்சியாக கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு கலை மற்றும் இலக்கிய முயற்சிகளை வெற்றிகரமாக முன்னெடுத்து வரும் தலைவர் சுகன் பஞ்சா அவர்களின் அர்ப்பணிப்பை பலரும் பாராட்டினர்.

கலை, பண்பாடு, பெற்றோர் மரியாதை, மூத்த கலைஞர்களுக்கான கௌரவிப்பு ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்த இந்த 10ஆம் ஆண்டு பெற்றோர் தின விழா, மலேசிய தமிழ் கலை வரலாற்றில் நீண்ட காலம் நினைவுகூரப்படும் சிறப்புமிக்க நிகழ்வாக அமைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *