ஆசியான்–ரஷ்யா நினைவு உச்சிமாநாட்டையொட்டி நடைபெற்ற கலைவிருந்து நிகழ்ச்சியில் பிரதமர் அன்வார் இப்ராஹிம்.

18 ஜூன் 2026

மாஸ்கோ, ஜூன் 18 – மலேசியப் பிரதமர் Anwar Ibrahim, ஆசியான்–ரஷ்யா நினைவு உச்சிமாநாட்டை முன்னிட்டு ரஷ்ய அதிபர் Vladimir Putin வழங்கிய சிறப்பு கலைவிருந்து (Gala Dinner) நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த விருந்து நிகழ்ச்சி, ரஷ்யாவின் வளமான வரலாறு, பாரம்பரியம் மற்றும் பல்வேறு இனங்களின் கலாச்சார அடையாளங்களை பிரதிபலிக்கும் கலைநிகழ்ச்சிகளால் சிறப்பிக்கப்பட்டது. குறிப்பாக, இஸ்லாமிய நாகரிகம் ரஷ்ய சமூகத்தின் உருவாக்கத்திலும் அதன் பண்பாட்டு வளர்ச்சியிலும் ஆற்றிய பங்களிப்புகள் கலை வடிவில் வெளிப்படுத்தப்பட்டன.

இந்நிகழ்வில் ஆசியான் உறுப்பு நாடுகளின் தலைவர்களும், உயர்மட்ட அரசியல் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இது நட்புறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும், பரஸ்பர புரிதலை மேம்படுத்துவதற்கும், பல்வேறு பிராந்திய மற்றும் உலகளாவிய விடயங்கள் குறித்து கருத்துப் பரிமாற்றம் மேற்கொள்வதற்குமான முக்கிய தளமாக அமைந்தது.

உலகம் தொடர்ந்து அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்பு சார்ந்த பல்வேறு சவால்களையும் நிச்சயமற்ற சூழ்நிலைகளையும் எதிர்கொண்டு வரும் நிலையில், இத்தகைய சந்திப்புகள் நாடுகளுக்கிடையேயான நம்பிக்கையை உறுதிப்படுத்துவதோடு, புதிய ஒத்துழைப்பு வாய்ப்புகளை ஆராய்வதற்கும் வழிவகுக்கின்றன.

மலேசியா, ஆசியான் மற்றும் ரஷ்யா இடையிலான உறவுகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், வர்த்தகம், முதலீடு, கல்வி, தொழில்நுட்பம் மற்றும் மக்கள்-மக்கள் தொடர்புகள் உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

ஆசியான்–ரஷ்யா உறவுகளின் வளர்ச்சியில் இந்த நினைவு உச்சிமாநாடு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுவதுடன், எதிர்காலத்தில் இருதரப்பு மற்றும் பல்தரப்பு ஒத்துழைப்புகளை வலுப்படுத்தும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *