அனைத்துலக நிலையிலான தமிழ்த்திருமகள் விருது 2026

16.06.2026

அண்மையில் ஜொகூர் மாநில ஆசிரியர் கழகத்தின் ஏற்பாட்டில் மாசாய் ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் 2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சிறப்புத் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் வகையில் சாதனை விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. நிகழ்ச்சிக்கு பெர்மாஸ் சட்டமன்ற உறுப்பினரான மாண்புமிகு ஹஜி பாஹருதீன் பின் மொஹமட் டைப் அவர்கள் வருகை புரிந்திருந்தார். அவர் தமது உரையில் சாதனை மாணவர்களைப் பாராட்டியதோடு அவர்களைச் சாதனையாளர்களாக உருவாக்கிய பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் மாசாய் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத் தலைவர் திரு.சுப்பிரமணியம் கிருஷ்ணன், பிளெண்டோங் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத் தலைவர் திரு.பஞ்சாச்சரம், மாசாய் காவல் நிலையத்தின் தலைமை அதிகாரி இன்ஸ்பெக்டர் ஜெகன் ராஜு, திரு.தனபாலன்,

திரு ஜெயராஜ், டத்தோ பாலமுரளி மற்றும் ஆசிரியர் கழகச் செயலவை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகாக் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.

 

இந்நிகழ்ச்சியில் சிறப்பம்சமாக ஆசிரியர் தனலெட்சுமி தமிழ்த்திரு அவர்கள் எஸ்.பி.எம். தேர்வில் தமிழ் மற்றும் தமிழ் இலக்கியப் பாடத்தில் A பெற்ற புத்திரி வாங்சா இடைநிலைப்பள்ளியைச் சார்ந்த மாணவி சுஜித்ரா ஹரிச்சந்திரன் அவர்களைப் பாராட்டும் வகையில் அனைத்துலக தமிழ்த்திருமகள் விருது 2026 வழங்கி சிறப்பித்தார்.

 

ஜொகூர் மாநிலத்தின் மக்கள் நலப் போராட்டவாதி மறைந்த இறையனார் செந்தமிழ்மறவர் திரு.அ.ஆ.தமிழ்த்திரு அவர்கள் விட்டுச்சென்ற தமிழ்ப்பணியின் தொடர்ச்சியாக கடந்த ஆறு ஆண்டுகளாகத் தமிழ் சார் துறைகளில் ஆளுமை செழுத்தி வரும் அன்பர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டு வருவதாகவும், இவ்வருடம் இவ்விருதானது ஸ்ரீ ருத்ரன் வானவில் கல்வி மையம், மலேசியா, பாசீர் கூடாங் ஆசிரியர் கழகம் ஜோகூர், மலேசியா, திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குறிஞ்சிப்பாடி, இந்தியா, சர்வதேச தமிழ்த்திறன் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், இந்தியா, தேஜஸ்வரலாயா கலாச்சார மையம் கொழும்பு இலங்கை, அகில உலக தமிழ் முழக்கக் கழகம், ஆஸ்திரேலியா ஆகிய பன்னாட்டு இயக்கங்களோடு இணைந்து தமிழ்த்திருமகள் விருது 2026 வழங்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

 

இடைநிலைப்பள்ளியில் மாணவர்கள் தமிழ்மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தைக் கற்பதை ஊக்கப்படுத்தும் முயற்சியாக இவ்விருது வழங்கப்பட்டுள்ளதாகவும் இதர மாணவர்களுக்கு இம்மாணவியின் சாதனை நனிச்சிறந்த முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதோடு மலேசிய மாணவர்களின் தமிழ் ஆளுமை அனைத்துலக அரங்கில் மிளிர வேண்டும் என்ற நோக்கிலும் இவ்விருதை தாம் தமது பன்னாட்டு நட்புகளோடு ஜொகூர் மாநில ஆசிரியர் கழகத்தின் தலைவர் ஐயா திரு. பாஸ்கரன் அவர்களின் ஒத்துழைப்போடும் வழங்கியுள்ளதாகக் கூறினார் ஆசிரியர் தனலெட்சுமி தமிழ்த்திரு.

தரமான மாணவச் சமுதாயத்தை உருவாக்க தாய்மொழிக் கல்வி கற்றல் என்பது அவசியமென்றும் நல்லொழுக்கமுள்ள மாணவர்களை உருவாக்க தாய்மொழிக்கல்வி நிச்சயம் கைக்கொடுக்கும் என்றும் கூறினார். சுய வரலாற்றை அறியாத இனம் மீண்டும் வரலாற்றைப் படைக்க இயலாது, அவ்வகையில் பல்லின மக்கள் வாழும் நமது மலேசிய மண்ணில் நமதின மாணவர்கள் சகோதரத்துவத்தோடும் பன்முகத்திறனோடும் விளங்குவதோடு நமது சுய அடையாளமான மொழியையும் இனத்தையும் என்றும் காத்து நிற்க வேண்டும் என்றும் ஆசிரியர் தனலெட்சுமி தமிழ்த்திரு கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *