தீ விபத்தில் வீடு இழந்த சஹாபத் உறுப்பினருக்கு சஹாபத் செமலேசியாவின் நிதி உதவி

 

தேதி: 04 ஜூன் 2026 – ஜித்ரா, கெடா.

அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில் தனது வீட்டை முழுமையாக இழந்த சஹாபத் உறுப்பினருக்கு, சஹாபத் செமலேசியா (SAHABAT SEMALAYSIA) அமைப்பு மனிதாபிமான அடிப்படையில் நிதி உதவியை வழங்கியுள்ளது.

ஜித்ராவில் வசித்து வரும் பாதிக்கப்பட்ட உறுப்பினரின் வீடு திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இந்த சம்பவத்தில் உயிரிழப்பு அல்லது காயம் எதுவும் ஏற்படாதது பெரும் ஆறுதலாக இருந்தாலும், வீட்டிலிருந்த அனைத்து அத்தியாவசிய பொருட்கள், உடமைகள் மற்றும் குடும்பத்தின் வாழ்வாதாரப் பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி நாசமாகின.

இந்த துயரமான சூழ்நிலையை அறிந்த சஹாபத் செமலேசியா தலைவர் திரு. எஸ். ரெமிஸ் அவர்களின் தலைமையில், அமைப்பின் சார்பில் உடனடி நிதி உதவி வழங்கப்பட்டது. இந்த உதவி, பாதிக்கப்பட்ட குடும்பத்தின் அவசரத் தேவைகளை பூர்த்தி செய்யவும், அவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கான ஆரம்பகட்ட ஆதரவாகவும் அமையும் என தெரிவிக்கப்பட்டது.

உதவித் தொகையை வழங்கிய பின்னர் பேசிய திரு. எஸ். ரெமிஸ், “சஹாபத் செமலேசியா என்பது சமூக அக்கறையுடனும் ஒற்றுமை உணர்வுடனும் செயல்படும் அமைப்பாகும். நமது உறுப்பினர்கள் எவரேனும் துயரமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்போது, அவர்களுடன் நின்று உதவுவது எங்களது பொறுப்பாகும். இந்த நிதி உதவி சிறியதாக இருந்தாலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நம்பிக்கையையும் மன உறுதியையும் அளிக்கும் என நம்புகிறோம்,” என்றார்.

மேலும், சமூகத்தில் நலிந்த மற்றும் அவசர உதவி தேவைப்படும் மக்களுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவதில் சஹாபத் செமலேசியா உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், இந்த கடினமான நேரத்தில் தங்களுடன் நின்று ஆதரவு வழங்கிய சஹாபத் செமலேசியா அமைப்பிற்கும் அதன் தலைமைத்துவத்திற்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

இந்த நிகழ்வு, சமூக ஒற்றுமை மற்றும் மனிதநேயத்தின் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதாக அங்கிருந்தவர்கள் கருத்து தெரிவித்தனர்.

– NAAN ORU MALAYSIAN செய்தியாளர்  ஜித்ரா, கெடா 04 ஜூன் 2026 –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *