ஜொகூர் பாரு, ஜூன் 3

மலேசியாவின் மாமன்னர், யாங் டி-பெர்துவான் அகோங் சுல்தான் இப்ராஹிம் இன்று முவார் நகரில் அமைந்துள்ள பிரபலமான R&H Cafe Satay Maharani உணவகத்தில் மக்களுடன் கலந்துரையாடி காலை உணவு அருந்தி நேரத்தை செலவிட்டார்.
சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தாரின் அதிகாரப்பூர்வ முகநூல் பதிவின்படி, மாமன்னர் இன்று காலை கோலாலம்பூரிலிருந்து தாமே வாகனம் ஓட்டி தங்காக் வழியாக முவாருக்கு பயணம் மேற்கொண்டார். பின்னர் முவார் நகரை அடைந்த அவர், அங்குள்ள பொதுமக்களுடன் அன்போடு உரையாடி அவர்களின் நலன்களை கேட்டறிந்தார்.
மாமன்னரின் வருகையை முவார் மாவட்ட அதிகாரி சைனல் எரான், முவார் நகராண்மைக் கழகத் தலைவர் நோர்ரிஸாம் முகமட் மற்றும் முவார் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி ராயிஸ் முக்லிஸ் அஸ்மான் அசீஸ் ஆகியோர் வரவேற்றனர்.
காலை உணவு நிகழ்வின்போது, மாமன்னர் பொதுமக்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு, அவர்களுடன் நெருக்கமாக பழகியதுடன், அங்கிருந்த வியாபாரிகள் மற்றும் உள்ளூர் மக்களிடமும் அக்கறையுடன் உரையாடினார்.
மக்களின் வாழ்வாதாரம் மற்றும் நலனில் எப்போதும் அக்கறை செலுத்தும் மாமன்னரின் இந்த வருகை, அரச குடும்பத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையிலான நெருக்கமான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
சாதாரண மக்களுடன் நேரடியாக சந்தித்து உரையாடுவதன் மூலம் அவர்களின் உணர்வுகளையும் தேவைகளையும் அறிந்து கொள்வதில் மாமன்னர் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறார். முவாருக்கான இன்றைய பயணமும் அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
இந்த விஜயம், மக்களுடன் நெருக்கமாக இருந்து அவர்களின் வாழ்க்கை நிலைமைகளை நேரடியாக அறிந்து கொள்ளும் சுல்தான் இப்ராஹிமின் தலைமைத்துவ பண்பையும், மக்கள்மீது கொண்டுள்ள அக்கறையையும் மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது.















