கோலாலம்பூர், மே 25, 2026 –

மலேசியாவின் பொருளாதார வளர்ச்சி, முதலீட்டு விரிவாக்கம் மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பை மையப்படுத்தி நடைபெறவுள்ள தேசியப் பொருளாதார மன்றம் 2026 (National Economic Forum – NEF 2026) வரும் ஜூலை 2ஆம் தேதி கோலாலம்பூரிலுள்ள சைம் டார்பி மாநாட்டு மையத்தில் சிறப்பாக நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு மலேசிய தேசிய வர்த்தக மற்றும் தொழில்துறை சபை (NCCIM) மற்றும் மலேசிய இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை இணைந்த சங்கம் (MAICCI) ஆகியவை இணைந்து இன்று கோலாலம்பூரில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியன.
இந்த சந்திப்பை NCCIM தலைவரும் MAICCI தலைவருமான Dato’ Sri N. Gopalakrishnan தலைமையேற்று நடத்தினார். அவர் உரையாற்றுகையில், “NEF 2026 என்பது வெறும் கருத்தரங்காக இல்லாமல், நாட்டின் பொருளாதார திசையை நிர்ணயிக்கும் முக்கிய கலந்துரையாடல் தளமாக அமையும். அரசாங்கம், தனியார் துறை, முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள் ஒரே மேடையில் சந்தித்து நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கான திட்டங்களை பகிர்ந்து கொள்ளும் அரிய வாய்ப்பாக இது அமையும்,” என்று தெரிவித்தார்.
மேலும், உலகளாவிய பொருளாதார மாற்றங்களுக்கிடையில் மலேசியா தனது போட்டித்திறனை வலுப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக டிஜிட்டல் பொருளாதாரம், பசுமை முதலீடுகள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் சிறு மற்றும் நடுத்தர தொழில்களின் வளர்ச்சி போன்ற துறைகள் இம்மன்றத்தில் முக்கிய கவனம் பெறவுள்ளதாக கூறினார்.
அதேவேளை, MAICCI மற்றும் NCCIM துணைத் தலைவருமான Thatha Dr. A.T. Kumararajah, NEF 2026 ஏற்பாட்டுக் குழுத் தலைவராக பொறுப்பேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அவர் பேசுகையில், “இந்த மன்றம் நாட்டின் பல இன வணிக சமூகங்களையும் ஒருங்கிணைத்து புதிய முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் தொழில்துறை கூட்டாண்மைகளை உருவாக்கும் மேடையாக அமையும்,” என்றார்.
இம்மன்றத்தில் உள்நாட்டு மற்றும் சர்வதேச தொழில்துறை தலைவர்கள், வர்த்தக அமைப்புகள், முதலீட்டாளர்கள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் அரசுத் துறை பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொள்ளவுள்ளனர். நாட்டின் எதிர்கால பொருளாதார வளர்ச்சி, முதலீட்டு சூழல், ஏற்றுமதி வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப மாற்றங்கள் குறித்த ஆழமான கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், இளைஞர் தொழில்முனைவோர் மற்றும் புதிய தொழில் தொடக்க நிறுவனங்களுக்கு (start-ups) சிறப்பு வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்திலும் பல அமர்வுகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் MAICCI துணைப் பொதுச் செயலாளரும் NCCIM பொதுச் செயலாளருமான Ganasambandan, ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்கள், தொழில்துறை பிரதிநிதிகள் மற்றும் ஊடகத்தினரும் கலந்துகொண்டனர்.
NEF 2026 மலேசியாவின் பொருளாதார எதிர்காலத்தை வடிவமைக்கும் முக்கிய தேசிய மேடையாக அமையும் என வணிக மற்றும் தொழில்துறை வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.














