23 மே 2026 | கோலாலம்பூர்

மலேசிய கடற்படை துறையில் புதிய வரலாறு படைத்த டாக்டர் தர்ஷினி கிருஷ்ணன்
மலேசியாவின் பாதுகாப்பு மற்றும் கடல்சார் மூலோபாயத் துறையில் சிறந்து விளங்கி வரும் கல்வியாளர் டாக்டர் தர்ஷினி கிருஷ்ணன், அண்மையில் இரண்டு முக்கியமான தேசிய அங்கீகாரங்களைப் பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
மலேசிய ராயல் கடற்படையின் (Royal Malaysian Navy) முக்கிய மூலோபாய ஆய்வு மையமான RMN Seapower Centre (PUSMAS) இன் “Visiting Fellow” ஆக அவர் நியமிக்கப்பட்டதுடன், Royal Malaysian Navy Reserve இல் “Honorary Lieutenant Commander” பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நியமனத்தை மலேசிய கடற்படையின் துணைத் தளபதி அதிகாரப்பூர்வமாக வழங்கியுள்ளார். பாதுகாப்பு மற்றும் கடல்சார் ஆய்வுத் துறையில் அவர் மேற்கொண்ட நீண்டகால பங்களிப்பிற்கான உயரிய அங்கீகாரமாக இது பார்க்கப்படுகிறது.
தற்போது National Defence University of Malaysia (UPNM) இன் Faculty of Defence Studies and Management பிரிவில் Strategic Department தலைவராகப் பணியாற்றி வரும் டாக்டர் தர்ஷினி, மலேசியாவின் முன்னணி கடல்சார் பாதுகாப்பு நிபுணர்களில் ஒருவராக மதிக்கப்படுகிறார்.
அவர் Universiti Kebangsaan Malaysia (UKM) பல்கலைக்கழகத்தில் Security Analysis and Policy துறையில் கல்வி பயின்றதுடன், உலகப் புகழ்பெற்ற King’s College London பல்கலைக்கழகத்தில் Maritime Power மற்றும் Strategic Maritime Studies தொடர்பான ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
கல்வித்துறையிலும் பாதுகாப்பு ஆய்வுத் துறையிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வரும் இந்தக் காலகட்டத்தில், டாக்டர் தர்ஷினியின் சாதனை பல இளம் பெண்களுக்கு புதிய ஊக்கமாக அமைந்துள்ளது.
கடல்சார் பாதுகாப்பு, தேசிய மூலோபாய திட்டமிடல் மற்றும் பாதுகாப்புக் கொள்கை வடிவமைப்பில் அவரது அறிவும் அனுபவமும் மலேசியாவின் எதிர்கால கடற்படை வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பாக இருக்கும் என நம்பப்படுகிறது.
“பெண்கள் எந்தத் துறையிலும் சாதிக்க முடியும் என்பதை டாக்டர் தர்ஷினி மீண்டும் நிரூபித்துள்ளார். அவரது சாதனை மலேசிய இந்திய சமூகத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்கிறது” என சமூக ஆர்வலர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
நாட்டிற்காக தொடர்ந்து சேவை செய்து, இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழும் டாக்டர் தர்ஷினி கிருஷ்ணனுக்கு பல தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.














