செகாமட் வட்டார தமிழ் பள்ளிகளுக்கிடையிலான விளையாட்டு போட்டி -துணையமைச்சர் யுனேஸ்வரன் தொடக்கி வைத்தார்
செகாமட் மார்ச் 26

செகாமட் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள தமிழ் பள்ளிகளுக்கிடையிலான ஒன்றிணைந்த விளையாட்டுப் போட்டிகளை தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.

இந்த விளையாட்டுப் போட்டிகள் செகாமட், ஸ்ரீ கெனாங்கான் இடைநிலைப் பள்ளியின் திடலில் உற்சாகமாக நடைபெற்றது.

செகாமட் வட்டாரத்தில் உள்ள தமிழ் பள்ளிகளின் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், பள்ளி வாரிய தலைவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

சிறப்பு பிரமுகர்களாக டிஎஸ்பி நாதன் முனியாண்டி, இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் முகமட் ஷாருநிஸாம் கலந்து சிறப்பித்தனர்.
இந்த விளையாட்டுப் போட்டிகள் மாணவர்களின் விளையாட்டு ஆற்றல் மற்றும் கட்டொலுங்கை வளர்ப்பதாக தமது உரையில் செகாமட் நாடாளுமன்ற உறுப்பினருமான யுனேஸ்வரன் கூறினார்.
கல்வியில் மட்டுமின்றி போட்டி விளையாட்டுகளிலும் மாணவர்கள் சிறந்து விளங்க பெற்றோர்கள் முக்கிய பங்காற்றுவதாக அவர் குறிப்பிட்டார்.
பள்ளியில் இருந்து தான் ஒற்றுமை வளரும் என்ற உண்மையான தோற்றத்தை இந்த விளையாட்டுப் போட்டிகள் பிரதிபலிப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
நமது இந்திய மாணவர்கள் கல்வியில் மட்டும் இன்றி விளையாட்டுப் போட்டிகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
கல்வி மற்றும் விளையாட்டுக்கள் உட்பட பல்வேறு திட்டங்களின் வழி தேசிய ஒற்றுமையை வலுப்படுத்த அரசாங்கம் உறுதியாக இருந்து வருவதாக அவர் சொன்னார்.
ஒரு ஒற்றுமையான இளைய தலைமுறையை உருவாக்க விளையாட்டுப் போட்டிகள் முக்கிய பங்காற்றுவதாக அவர் தெரிவித்தார்.
இந்த விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அவர் கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.















