புனித அல்-குர்ஆனை அவமதிப்பதை அரசு ஒருபோதும் அனுமதிக்காது – பிரதமர் அன்வார் உறுதி

புனித அல்-குர்ஆனை அவமதிப்பதை அரசு ஒருபோதும் அனுமதிக்காது – பிரதமர் அன்வார் உறுதி

கோலாலம்பூர், மார்ச் 2-

மலேசியாவில் எந்தவொரு தரப்பினரும் புனித அல்-குர்ஆனை எந்த வடிவத்திலும் அவமதிப்பதை மடாணி அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று மிகத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

 

அண்மையில் புனித அல்-குர்ஆன் அவமதிக்கப்பட்ட சம்பவம் குறித்துப் பேசிய அவர், இது தொடர்பாகக் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருவதால் பொதுமக்கள் பொறுமை காக்க வேண்டும் என்றும், அவசரப்பட்டுத் தீர்ப்பு வழங்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

 

சட்டத்தின் ஆட்சி நடைபெறும் இந்த நாட்டில், சட்ட நடைமுறைகளை மீறி தன்னிச்சையாக எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியாது என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

 

மலேசியாவின் அதிகாரப்பூர்வ சமயமாக இஸ்லாம் விளங்கும் நிலையில், நாட்டின் நல்லிணக்கத்தைப் பேணுவதற்காக இஸ்லாம் மட்டுமின்றி எந்தவொரு சமயத்தையும் அவமதிக்கும் செயல்களை அரசு ஒருபோதும் எளிதாக எடுத்துக்கொள்ளாது என்று அவர் குறிப்பிட்டார்.

 

ஸ்ரீ பெர்டானா வளாகத்தில் உள்ளூர் சமூகத் தலைவர்களுடன் நடைபெற்ற நோன்பு துறப்பு நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், சமய நிந்தனை விவகாரங்களில் அரசு நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை முற்றாக மறுத்தார்.

குறிப்பிட்ட அந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நபரை போலீசார் ஏற்கனவே கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும், அவரின் மனநிலை மற்றும் சட்ட மீறல்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் விளக்கமளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *