கிளினிக் மெடிக் கியூ-வின் சிலிம் ரிவர் வெள்ள நிவாரணப் பணி: மனிதநேயத்திற்காக ஒரு நாள்!

கிளினிக் மெடிக் கியூ-வின் சிலிம் ரிவர் வெள்ள நிவாரணப் பணி: மனிதநேயத்திற்காக ஒரு நாள்!

 

தொடர்ச்சியான கனமழையால், கடந்த சில நாட்களாக சில ரிவர் வட்டாரத்தில் கோலா சிலிம், சிலிம் வில்லேஜ் ஆகிய பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பல குடும்பங்கள் இடம்பெயர்ந்து வெள்ள நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளன. இத்தகைய நெருக்கடியான நேரத்தில், சமூகம் ஒன்றுபட்டு நிற்கும்போதுதான் உண்மையான பலம் வெளிப்படுகிறது. இந்தச் சூழலில், சிலிம் ரிவர் கிளினிக் மெடிக் கியூ (Klinik Medic Q), தஞ்சோங் மாலிம் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்துடன் இணைந்து, பாதிக்கப்பட்ட நம் மக்களுக்கு அத்தியாவசிய மருத்துவ உதவிகளை வழங்க முன்வந்துள்ளது.

மருத்துவக் குழுவினர் நேரடியாக நிவாரண மையங்களுக்குச் சென்று, உடல்நிலை சரியில்லாதவர்களுக்குச் சிகிச்சை அளித்ததுடன், வயதானவர்கள், குழந்தைகள், நாள்பட்ட நோயாளிகள் அனைவரும் இந்தச் சவாலான காலகட்டத்தில் உரிய கவனிப்பைப் பெறுவதை உறுதி செய்தனர். மக்கள் சேவையின் அடையாளமாகத் திகழும் தஞ்சோங் மாலிம் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சாங் லி காங் அவர்களின் தொடர்ச்சியான ஆதரவுக்கும், தலைமைக்கும், அர்ப்பணிப்புக்கும் கிளினிக் மெடிக் கியூ மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தது.

அத்துடன், நிலைமை மோசமடைந்தவுடனேயே உரிய கருவிகளை ஏற்பாடு செய்து, களப்பணியை தஞ்சோங் மாலிம் நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்பு அதிகாரி அலிஃப் அஷ்ராஃப்-இன் உடனடியாக ஒருங்கிணைத்தார்.

மேலும், இரவு பகல் பாராது அயராது உழைக்கும் அனைத்து அரசாங்க முகவர் நிலையங்கள், முன்னணி ஊழியர்கள், தன்னார்வலர்கள், உள்ளூர் வீரர்களுக்கும் கிளினிக் மெடிக் கியூ நிர்வாகம் ஆழமான பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

மக்களுக்குச் சேவை செய்வதே கிளினிக் மெடிக் கியூ-வின் எளிமையான நோக்கம். “மக்களும் கிளினிக் மெடிக் கியூவும் பிரிக்க முடியாதவர்கள்” என்ற உறுதியான நம்பிக்கையுடன், மக்கள் எங்கு தேவைப்படுகிறார்களோ, அங்கு நாங்கள் இருப்போம் என்று அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நவனீத் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக இருக்குமாறும், அவர்கள் தனியாக இல்லை என்றும், இந்தச் சவாலை அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து கடப்போம் என்றும் நவீனத் நம்பிக்கையூட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *