சுக்மா போட்டியில் சிலம்பம்: மலேசிய இந்தியர்களுக்கு நற்செய்தி இது
கோலாலம்பூர் ஆக 15
2026 சுக்மா போட்டியில் இந்தியர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் மீண்டும் இடம்பெற்றுள்ளது இந்நாட்டில் உள்ள இந்திய சமூகத்திற்கு ஒரு நற்செய்தி என தேசிய ஒருமைப்பாட்டு துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.
சிலாங்கூர் அரசாங்கம் ஏற்பாடு செய்யும் 2026 சுக்மா போட்டியில் சிலம்பம், முவாதாய் மற்றும் பெத்தான்கியூ ஆகிய 3 விளையாட்டுக்கள் சேர்க்கப்படும் என நேற்று நடைபெற்ற சுக்மா போட்டியின் உயர்நிலைக் குழு முடிவு செய்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த கூடுதல் மூன்று விளையாட்டுகளை சிலாங்கூர் மாநில விளையாட்டு மற்றும் தொழில் முனைவர் ஆட்சி குழு உறுப்பினரும் சுக்மா போட்டியின் நடவடிக்கை குழு தலைவருமான முகமட் நஜ்வான் செய்த பரிந்துரையை சுக்மா போட்டியின் உயர்நிலை குழுவினர் ஏக மனதாக ஏற்று கொண்டனர்.
நேற்று நடந்த சுக்மா போட்டி உயர்நிலைக் குழுவின் சிறப்பு கூட்டத்தில் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஹன்னா இயோ, சரவாக் இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில் முனைவர் மேம்பாடு அமைச்சர் டத்தோஸ்ரீ அப்துல் காரிம் மற்றும் மலேசிய ஒலிம்பிக் மன்ற தலைவர் டத்தோஸ்ரீ முகமட் நோர்சா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இது நமது பாரம்பரியம் மட்டுமின்றி தேசிய அரங்கில் சிலம்பத்தின் பெருமையை வெளிப்படுத்த ஒரு அற்புத வாய்ப்பு என அவர் சொன்னார்.
சுக்மா போட்டியில் மீண்டும் சிலம்பத்திற்கு வாய்ப்பளிக்க வழி வகுத்த சுக்மா போட்டியின் உயர்நிலைக் குழுவினருக்கு தாம் நன்றி கூறுவதாக சரஸ்வதி தெரிவித்தார்.
#naanorumalaysian
















