கோலாலம்பூர், ஜூன் 12, 2026

மலாயா பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையில் இன்று மாலை 5.00 மணிக்கு நடைபெற்ற “துன் டாக்டர் எஸ். சாமிவேலுவின் தலைமைத்துவ மரபும் மலேசிய இந்திய சமூகத்தின் மாற்றமும்” என்ற சிறப்பு நிகழ்வு, மலேசிய இந்தியர்களின் அரசியல், கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்தில் துன் டாக்டர் எஸ். சாமிவேலு ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களிப்புகளை மீள்பார்வை செய்த அர்த்தமிக்க சந்திப்பாக அமைந்தது.
இந்த நிகழ்வில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னாள் அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டு துன் சாமிவேலுவுடன் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டனர்.

திரு ஓம்ஸ் தியாகராஜன், துன் சாமிவேலுவின் மலேசிய இந்திய சமூகத்திற்கான அர்ப்பணிப்பும் சேவைகளும் இன்றளவும் மக்களால் பெரிதும் மதிக்கப்படுவதாகக் குறிப்பிட்டார். ஒரு காலத்தில் தாம் அவருடன் கருத்து வேறுபாட்டில் இருந்தபோதிலும், பின்னர் இருவருக்கும் ஆழமான நட்பு உருவானதாகவும், அந்த நட்பு இன்னும் நீண்ட காலம் தொடர முடியாமல் போனது குறித்து வருத்தம் தெரிவித்தார்.
முன்னாள் துணை அமைச்சரும் மூத்த அரசியல் தலைவருமான தன் ஸ்ரீ கே. குமரன், துன் சாமிவேலுவுடன் இணைந்து அரசியலில் எதிர்கொண்ட சவால்களையும், இருவரும் வளர்ந்த அரசியல் பயணத்தையும் நினைவுகூர்ந்தார். சிலாங்கூரிலிருந்து துன் சாமிவேலுவும், பேராக்கிலிருந்து தாமும் அரசியலுக்கு வந்த விதம் குறித்து பகிர்ந்த அவர், 1967ஆம் ஆண்டு இந்தோனேசிய தூதரகத்தைச் சுற்றிய அரசியல் பதற்ற கால அனுபவங்களையும் எடுத்துரைத்தார்.

மலாயா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் மணியம், மாணவர் வாழ்க்கையில் துன் சாமிவேலுவை சந்தித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இளைஞர்களுக்கு அவர் வழங்கிய ஊக்கமும், வாராந்திர பொதுமக்கள் சந்திப்புகள் மூலம் மக்களுடன் நேரடி தொடர்பை பேணிய தலைமைத்துவ பாணியும் சிறப்பிக்கப்பட்டது.
தன் ஸ்ரீ டி. மாரிமுத்து, 6வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் துன் சாமிவேலுவுடன் இணைந்து பணியாற்றிய அனுபவங்களை நினைவுகூர்ந்தார். மேலும், தமக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்க முன்வந்த அவரது பெருந்தன்மையையும், பின்னர் AIMST பல்கலைக்கழகத்தை உருவாக்குவதில் அவர் காட்டிய தொலைநோக்கு சிந்தனையையும் பாராட்டினார்.

முன்னாள் மஇகா தேசியத் தலைவரான டத்தோ வைதியலிங்கம், இந்து ஆலயங்களின் வளர்ச்சிக்கும் அரசாங்க நிதி ஒதுக்கீடுகளுக்கும் முக்கியத்துவம் வழங்கிய தலைவர்களில் துன் சாமிவேலு முன்னணியில் இருந்தார் என்று குறிப்பிட்டார். ஆலயங்களுக்கு அரசாங்க உதவி பெறுவது மிகவும் கடினமாக இருந்த காலகட்டத்தில், அவர் தொடர்ந்து போராடி பல ஆலயங்களுக்கு நிதி மற்றும் வசதிகளை பெற்றுத் தந்ததாக கூறினார்.
முன்னாள் மஇகா தேசியத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான தன் ஸ்ரீ டாக்டர் எஸ். சுப்பிரமணியம், துன் சாமிவேலுவின் வாழ்க்கைப் பயணத்தை விரிவாக விளக்கினார். கிளுவாங், ஜோகூரில் தொடங்கிய அவரது வாழ்க்கை, ராவாங் மற்றும் குவாங்கில் தொடர்ந்தது. தமிழ் பள்ளியில் கல்வி கற்ற அவர், அலுவலக உதவியாளராகவும் பின்னர் வரைதொழிலாளராகவும் பணியாற்றி, தொடர்ந்து உயர்கல்வி பெற்று கட்டிடக்கலை துறையில் பட்டம் பெற்றார் என்று குறிப்பிட்டார்.
அரசியல் வாழ்வில் சிலாங்கூர் மாநில மஇகா செயலாளராக இருந்து, பின்னர் தேசிய துணைத் தலைவராகவும், துணைத் தலைவராகவும் உயர்ந்து, மறைந்த தன் ஸ்ரீ வி. மாணிக்கவாசகத்தின் மறைவுக்குப் பின்னர் மஇகா தேசியத் தலைவராக பொறுப்பேற்றார்.
அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், நாட்டின் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்காற்றிய துன் சாமிவேலு, வடக்கு–தெற்கு அதிவேக நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களை முன்னெடுத்தார். அவரது தொலைநோக்கு பார்வையின் விளைவாக MIED, AIMST பல்கலைக்கழகம், Vanto Academy உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. குறிப்பாக AIMST பல்கலைக்கழகம் மலேசிய இந்தியர்களின் கல்வி முன்னேற்றத்தில் புதிய வரலாற்றை படைத்தது.
நிகழ்வில் கலந்து கொண்ட சமூகத் தலைவர் திரு வெற்றிவேலன், 1987ஆம் ஆண்டு முதல் துன் சாமிவேலுவுடன் ஏற்பட்ட நெருங்கிய தொடர்புகளை நினைவுகூர்ந்தார். அக்காலத்தில் மஇகா கிளைத் தலைவராக நியமிக்கப்படுவது மிகவும் கடினமான ஒன்று என்றும், பல தடைகள் மற்றும் எதிர்ப்புகளை எதிர்கொண்டதாகவும் அவர் கூறினார்.
1989ஆம் ஆண்டு பிஜே கூட்டுறவு அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், மறைந்த டத்தோ கே. பத்மநாபன் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் முன்னிலையில், “வெற்றிவேலன், உனக்கு ஒரு மஇகா கிளை கொடுத்தால் எம்.ஜி. பண்டிதன் என்னைக் கேள்வி கேட்பார்” என்று துன் சாமிவேலு கூறியதாக அவர் நினைவுகூர்ந்தார்.

அதற்கு தாம், “பண்டிதன் ஒரு துணைத் தலைவர் மட்டுமே; நீங்கள் தேசியத் தலைவர்” என்று பதிலளித்ததாகவும் தெரிவித்தார்.
பின்னர் 1989ஆம் ஆண்டு நடைபெற்ற அம்பாங் ஜெயா இடைத்தேர்தல் காலத்தில், துன் சாமிவேலுவுடன் தினமும் தேர்தல் பிரசாரங்களில் கலந்து கொண்டதாகவும், பாரிசான் நேஷனல் வேட்பாளர் டத்தோ ஓங் டெக் கியாட் வெற்றி பெற்ற பிறகு நடைபெற்ற வெற்றி விருந்தில், புதிய மஇகா கிளையை அமைக்கத் தயாராக இருக்குமாறு துன் சாமிவேலு தமக்கு அறிவுரை வழங்கியதாகவும் கூறினார்.
“இன்று மஇகா கிளைகள் எளிதாக வழங்கப்படுகின்றன. ஆனால் அன்றைய காலத்தில் ஒரு கிளையைப் பெற பல ஆண்டுகள் உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் தியாகம் தேவைப்பட்டது,” என்று அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, கோலாலம்பூர் மற்றும் நாடு முழுவதும் இந்திய சமூகத்திற்காக தாம் மேற்கொண்ட பணிகளை நினைவுபடுத்திய அவர், குறிப்பாக கூட்டாட்சி பிரதேச தமிழ் பள்ளிகள், கோவிட்-19 பெருந்தொற்று கால உதவிகள் மற்றும் வெள்ளப் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளில் தனது பங்களிப்புகளை எடுத்துரைத்தார்.
நிகழ்வின் முடிவில், துன் டாக்டர் எஸ். சாமிவேலுவின் தலைமைத்துவம், தொலைநோக்கு பார்வை, சமூக மேம்பாட்டிற்கான அர்ப்பணிப்பு மற்றும் மலேசிய இந்திய சமூகத்தின் கல்வி, பொருளாதார மற்றும் அரசியல் முன்னேற்றத்திற்காக அவர் ஆற்றிய சேவைகள் என்றும் வரலாற்றில் நிலைத்திருக்கும் எனப் பங்கேற்பாளர்கள் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தினர்.















