நாளைய தண்ணீரை இன்று காப்போம் – ஈப்போவில் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு நிகழ்வு 

ஈப்போ, 25 மார்ச் 2026 –

“நீர் இன்றி உலகம் இயங்காது” என்ற வள்ளுவனின் சிந்தனையை முன்னிறுத்தி, ‘சுவாரா ஆயிர் கிந்தா பேரா’ அமைப்பு 2026 உலக தண்ணீர் தினத்தை மார்ச் 22 அன்று ஈப்போ மேரு ராயா மைடின் பேரங்காடி நிகழ்வரங்கில் சிறப்பாகக் கொண்டாடியது.

அமைப்பின் நிறுவனர் மல்லிகா முனியாண்டி, கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நீர் மேலாண்மைத் துறையில் பணியாற்றி வருவதாகக் கூறினார். நீரின் அருமையை உணராமல் பலர் அதை வீணாக்குவது கவலைக்குரியதாக இருப்பதாகவும், எதிர்கால தலைமுறைக்கு தண்ணீர் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்திருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார். “நாளைய தண்ணீரை இன்று சேமிப்போம்” என்பதே தங்களின் வழிகாட்டும் கோட்பாடு என அவர் தெரிவித்தார்.

நீர் மாசுபாட்டுக்கான காரணங்களை எடுத்துரைத்த அவர், பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்களை குழாய்களில் ஊற்றுவது, சிகரெட் துண்டுகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், டிஷ்யூ பேப்பர்கள் போன்றவற்றை நீர்நிலைகளில் வீசுவது போன்ற செயல்கள் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்றார். குறிப்பாக கடலில் சேரும் சிகரெட் கழிவுகள் மீன்களின் உணவுச் சங்கிலியில் கலந்து, மனிதர்களுக்கே தீங்கு விளைவிப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

 

இந்த விழிப்புணர்வு நிகழ்வில் நீர் மேலாண்மை நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். பள்ளி மாணவர்களுக்கான வண்ணம் தீட்டும் போட்டி நிகழ்ச்சியின் சிறப்பாக அமைந்தது. நீரின் புனிதத்தை உணர்ந்து, ஒவ்வொருவரும் ஒரு சொட்டு நீரைக்கூட வீணாக்காமல் பாதுகாக்க வேண்டும் என்ற அழைப்புடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *