புக்கிட் ஜாலில் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பாலர் பள்ளி மாணவர்களின் 16-வது ஆண்டு போட்டி விளையாட்டு கோலாகலம்!

கோலாலம்பூர், மார்ச் 15:

புக்கிட் ஜாலில் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பாலர் பள்ளி மாணவர்கள் தங்களின் விளையாட்டுத் திறனைப் பறைசாற்றும் வகையில், 16-வது ஆண்டு விளையாட்டுப் போட்டி பள்ளித் திடலில் மிகுந்த உற்சாகத்துடன் அரங்கேறியது. இந்தச் சிறப்புமிக்க விழாவினை செப்பூத்தே மண்டல மக்கள் பிரதிநிதித்துவ மன்றத்தின் (MPP) துணை மண்டலம் 6-ன் தலைவர் ஆல்வின் ஆரியரத்தினம் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்துச் சிறப்பித்தார்.

போட்டித் திடலில் அணிவகுத்து நின்ற பாலர் பள்ளி மாணவர்கள், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் மிகுந்த ஆர்வத்துடனும் துடிப்புடனும் கலந்துகொண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர். மாணவர்களின் இந்த விளையாட்டு ஆர்வத்திற்கு வலுசேர்க்கும் வகையில், பெற்றோர்களும் தங்களுக்கு என ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போட்டிகளில் உற்சாகத்துடன் பங்கேற்று போட்டி விளையாட்டினைக் களைகட்டச் செய்தனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய சிறப்பு விருந்தினர் ஆல்வின் ஆரியரத்தினம், சிறுவயதிலேயே மாணவர்களிடையே விளையாட்டு உணர்வையும் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வையும் வளர்ப்பது மிகவும் பாராட்டுக்குரியது என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மேலும், பாலர் பள்ளியின் தொடக்ககால வளர்ச்சிக்குத் தூணாக இருக்கும் வகையில் ஒரு சிறு நிதியுதவியையும் அவர் மனமுவந்து வழங்கினார்.

இந்த விளையாட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெறுவதற்குப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம், தாராள மனம்கொண்ட நன்கொடையாளர்கள் என அனைவரும் தங்களின் மேலான ஒத்துழைப்பினை வழங்கியிருந்தனர். குறிப்பாக, 2026-ஆம் ஆண்டிற்கான இந்தச் போட்டி விளையாட்டை மிக நேர்த்தியாகவும் திட்டமிட்டபடியும் ஏற்பாடு செய்திருந்த செயற்குழுவினருக்குப் பள்ளி நிர்வாகம் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டது. விழாவின் இறுதி நிகழ்வாக, பல்வேறு போட்டிகளில் வெற்றி வாகை சூடிய மாணவர்களுக்குச் சிறப்பு விருந்தினர் பரிசுகளை வழங்கிப் பாராட்டியதுடன் விழா இனிதே நிறைவுற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *