5 March 2026

வெளிநாடுகளில் உள்ள மலேசியர்களின் நலனில் அரசு அக்கறை: விஸ்மா புத்ரா நடவடிக்கைக்குப் பாப்பாராய்டு வீரமான் பாராட்டு
ஷா ஆலம், மார்ச் 5- வெளிநாடுகளில் வாழும் மலேசியர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், வெளியுறவு அமைச்சகம் (விஸ்மா புத்ரா) பிரத்யேக உதவி வழிகளைத் திறம்பட செயல்படுத்தி வருகிறது.
இவ்வேளையில் விஸ்மா புத்ராவிற்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகள் என்று சிலாங்கூர் மாநில மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு பாப்பாராய்டு வீரமான் கூறினார்.
உதவி தேவைப்படும் மலேசியர்கள் அமைச்சகத்தின் செயல்பாட்டு அறையை +603-8887 4570 என்ற தொலைபேசி எண் அல்லது dutyofficer@kln.gov.my என்ற மின்னஞ்சல் வழியாகத் தொடர்பு கொள்ளலாம்.
அவசரக் காலங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி மற்றும் முறையான உதவிகளை ஒருங்கிணைத்து வழங்குவதற்கான மையமாக விஸ்மா புத்ராவின் இந்தச் செயல்பாட்டு மையம் திகழ்கிறது.
உலகில் எந்தப் பகுதியில் இருந்தாலும் மலேசியர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமை என்பதை இந்த முயற்சி மிகத் தெளிவாகப் பிரதிபலிக்கிறது.
நெருக்கடியான சூழலில் அரசு காட்டும் இந்தத் துரித நடவடிக்கை மற்றும் சிறப்பான வழிகாட்டுதல்கள் அங்குள்ள மலேசியர்களுக்கு மிகுந்த மனநிறைவை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் விவரித்தார்.
அரசாங்கத்தின் இத்தகைய அர்ப்பணிப்புடன் கூடிய சேவை மற்றும் அக்கறையுள்ள அணுகுமுறையைப் பொதுமக்கள் பெரிதும் பாராட்டி வரவேற்கின்றனர் என்று பந்திங் சட்டமன்ற உறுப்பினருமான அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்திருந்தார்.















