பெட்டாலிங் ஜெயா, ஜன 16-

இவ்வாண்டு தைப்பூசத் திருவிழா எதிர்வரும் பிப்ரவரி 1ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு இவ்வாண்டு தைப்பூச நடவடிக்கை குழு அதன் பணிகளை மீண்டும் இவ் தொடர்கிறது.
இந்த தகவலை செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தெரிவித்தார். தைப்பூசத் திருவிழா சமய நெறியுடன் பக்தியுடனும் கொண்டாடப்பட வேண்டும் என்பதை முன்னிட்டு இந்த தைப்பூச நடவடிக்கை குழு இலக்கினை நிர்ணயித்துள்ளது.
தைப்பூச பணிக் குழு தொடங்கப்பட்டு 12 ஆண்டுகள் பூர்த்தியாகி விட்டது.நீண்ட ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் வாயிலாக இந்த பணிக் குழு பல வெற்றியை கண்டுள்ளது.
அதேபோல் இவ்வாண்டும் தைப்பூச நடவடிக்கை குழு அதன் பணிகளை தொடரவுள்ளது. இந்நிலையில், சிலாங்கூரில் உள்ள பத்துமலை, கெடா சுங்கை பட்டாணி, கோல சிலாங்கூர், ஈப்போ கல்லுமலை, பினாங்கு தண்ணீர்மலை என பல முருகன் ஆலயங்களில் தைப்பூச நடவடிக்கை குழுவினர் களத்தில் இறங்கியுள்ளனர்.
இதில் பத்துமலையில் மட்டும் கிட்டத்தட்ட 300 தொண்டூழியர்கள் தங்களின் பணியை மேற்கொள்ள உள்ளனர்.
அதே வேளையில் தைப்பூச விழாவின் போது மதுபான விற்பனை, போக்குவரத்து நெரிசல், குப்பைகள் அகற்றுவது, மோட்டார் சைக்கிள்கள் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பது என அனைத்து விவகாரங்களில் கவனம் செலுத்தப்படும் என்று செந்தொசா சட்டமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.
போக்குவரத்து நெரிசல், கார் நிறுத்துமிடம் போன்ற பிரச்சனைகளை தவிர்க்க பக்தர்கள் முடிந்தால் பொதுப் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்த வேண்டும் என்று டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கேட்டுக்கொண்டார்.
ஆக மொத்தத்தில் தைப்பூச விழாவை பக்தர்கள் சமய நெறியோடு இந்த விழாவை கொண்டாட வேண்டும். இதுவே தைப்பூச பணிக் குழுவின் வேண்டுகோள் என்று குணராஜ் வலியுறுத்தினார்.















