தேதி : 10 ஜனவரி 2026

சென்னை / கோலாலம்பூர்
அயலகத் தமிழர் தினம் 2026: மலேசியத் தமிழர்களின் பங்களிப்பு பாராட்டப்பட்டது
தமிழ்நாடு அரசு சார்பில் சென்னையில் நடைபெற்ற அயலகத் தமிழர் தினம் 2026 விழா, உலகம் முழுவதிலும் வாழும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் முக்கிய மேடையாக அமைந்தது. இந்தப் பெருவிழாவில் மலேசியாவைச் சேர்ந்த தமிழர்கள் பெருமளவில் கலந்து கொண்டு, தமிழ்மொழி, பண்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சியில் தங்களின் பங்களிப்பை வெளிப்படுத்தினர்.

இந்த விழாவில் பெனாங்க் மாநிலத்தைச் சேர்ந்த டத்தோ சுந்தரராஜூ, டத்தோ ஸ்ரீ டாக்டர் எம். சரவணன், மலேசிய இந்திய காங்கிரஸ் (ம.இ.கா) தேசியத் துணைத் தலைவர், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் மலேசியாவை பிரதிநிதித்துவப்படுத்தி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
விழாவில் உரையாற்றிய மலேசிய பிரதிநிதிகள், தமிழ்மொழி மலேசியாவில் தலைமுறை தலைமுறையாக பாதுகாக்கப்பட்டு வருவதையும், தமிழ்நாடு உலகத் தமிழர்களின் தாயகமாக தொடர்ந்து செயல்பட்டு வருவதையும் நினைவுகூர்ந்தனர். இலக்கியம், கல்வி, வர்த்தகம், தொழில் முதலீடு ஆகிய துறைகளில் மலேசியத் தமிழர்கள் ஆற்றிவரும் பங்களிப்பு குறித்து அவர்கள் பெருமிதம் தெரிவித்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் அயலகத் தமிழர் தின விழா, உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் பண்பாட்டு மற்றும் பொருளாதார பாலமாக விளங்குவதாகவும், தமிழ்நாடு – மலேசியா இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இவ்விழா அமைந்துள்ளதாகவும் கருத்து தெரிவிக்கப்பட்டது.
விழாவில்,
“தமிழ் எங்கள் உயிர் என்பதாலே – வெல்லும்
தரமுண்டு தமிழருக்குப் புவிமேலே”
என்ற கவிதை வரிகள் முழங்க, மலேசியாவிலிருந்து வந்த தமிழர்கள் மத்தியில் ஆழ்ந்த உணர்வெழுச்சி காணப்பட்டது.
அயலகத் தமிழர்களின் அறிவாற்றல், தொழில் அனுபவம், முதலீடு மற்றும் சமூக பங்களிப்புகளை தமிழ்நாட்டின் வளர்ச்சியுடன் இணைக்கும் நோக்கில் அயலகத் தமிழர் தினம் 2026 ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்ததாக மலேசியப் பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர்.















