ஆசிரியர் தமிழ்தனாவிற்கு தேசிய அளவிலான பாராட்டு விருது
பிரதான நட்சத்திரம் 2025

இயல் இசை நாடகம் எனும் முத்தமிழ் சார் துறைகளில் தமது ஆளுமையை தேசிய மற்றும் அனைத்துலக நிலையில் பதித்து வரும் ஜொகூர் மாநிலத்தைச் சார்ந்த ஆசிரியர் தனலெட்சுமி இராஜேந்திரன் (திருமதி அ.ஆ.தமிழ்த்திரு) அவர்கள் அண்மையில் கோல்டன் எம்பாயர் மீடியா மலேசியா நிறுவனம் ஏற்று நடத்திய தேசிய நிலையிலான பிரதான நட்சத்திரம் 2025 விருதளிப்பு விழாவில் மலேசிய சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு அமைச்சகம், மலேசிய சாதனை புத்தகம் மற்றும் தேசிய நிலையிலான பல கலைசார் அமைப்புகளின் ஆதரவோடு நடத்தப்பட்ட இவ்விருது விழாவில் தேசிய நிலையில் பிராதான நட்சத்திரமாகத் தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கி கௌரிவிக்கப்பட்டார்.

ஆசிரியர் என்ற நிலையில் தாம் பணிபுரிந்த மாசாய் தமிழ்ப்பள்ளி, பண்டார் ஶ்ரீ அலாம் தமிழ்ப்பள்ளி மற்றும் பாசீர் கூடாங் தமிழ்ப்பள்ளிகளில் முத்தமிழ் சார் துறைகளில் பல சாதனை மாணவர்களை வடித்து மாவட்டம்,மாநிலம், தேசியம் மற்றும் அனைத்துலக நிலை வரை தடம் பதித்த இவர் கலைத்துறையிலும் தட்டம் பதிக்க தவரவில்லை. ஆரம்பப்பள்ளி ஆசிரியராக இருந்தாலும் இடைநிலைப்பள்ளி மாணவர்களையும் கருத்தில் கொண்டு பல இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கும் தமிழ் மற்றும் கலை சார் துறைகளில் வழிகாட்டி அவர்களையும் பல சாதனைகளைச் செய்ய ஊக்கமூட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக , கடைநிலை மாணவர்கள், தனித்து வாழும் தாய்மார்களின் குழந்தைகள், பி40 எனக் குறிப்பிடப்படும் வசதி குறைந்த குடும்பங்களைச் சார்ந்த மாணவர்களும் கல்வி மற்றும் கலைத்துறையில் தடம் பதிக்க வேண்டும் என்ற நோக்கில் அவர்களின் திறமைகளையும் பரைசாற்ற தமிழ்தனா ஶ்ரீ ருத்ரன் நடனக்குழுவை முற்றிலும் இலவசமாக வழிநடத்தி அம்மாணவர்களுக்கு நடன பயிற்சிகளையும் வழங்கி வருகிறார். அக்குழுவில் பயணிக்கும் மாணவர்களும் பல போட்டிகளில் வெற்றி வாகை சூடியதோடு மலேசிய சாதனை புத்தகத்திலும் தமிழ்நாட்டின் தில்லி கலை இலக்கியப் பேரவையின் நற்சான்றிதழையும் பெற்று அனைத்துலக நிலையில் சாதனை படைத்து வருகின்றனர்.
நமது மலேசிய மண்ணின் தமிழின் மாண்பை பல அனைத்துலக மேடைகளில் தமது பேச்சாளுமையாளும் கலை சார் படைப்புகளாலும் பதித்து வரும் இவர் பல அனைத்துலக விருதுகளையும் பெற்றதோடு நின்றுவிடாமல் பன்னாட்டு இயக்கங்களோடு இணைந்து பல முத்தமிழ் சார் முன்னெடுப்புகளையும் அனைத்துலக நிலையில் எடுத்து வருகிறார் என்பது மலேசிய மண்ணிற்குப் பெருமை என்றால் அது மிகையாகாது.
தேசிய மற்றும் அனைத்துலக நிலையில் தமிழ் மற்றும் கலை சார்ந்த பல ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பித்து, தமிழ் மொழி மற்றும் கலைத் துறையில் பல உலகச் சாதனைகளைப் படைத்து, தேசிய மற்றும் சர்வதேச விருதுகளைப் பெற்றதோடு நின்று விடாமால் B40 மற்றும் ஒற்றைப் பெற்றோர் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவச நடனப் பயிற்சிகளை வழங்கி அவர்களையும் சாதனை மாணவர்களாக உருவாக்கி வரும் ஆசிரியர் தனலெட்சுமி அவர்களின் அர்ப்பணிப்பு, சேவையுணர்வு மற்றும் கலைமீது அவர் கொண்ட தாகத்தையும் பாராட்டி இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டதாக இவ்விருதளிப்பு விழாவின் ஏற்பாட்டுக்குழுத் தலைவரும் Golden Empire Media Malaysia-வின் தலைமை நிர்வாகியுமான திரு. மகேந்திரன் கூறினார்.
ஆசிரியர் என்ற அறப்பணியை ஆற்றி வரும் அதே நேரத்தில் தமது கணவர் இறையனார் செந்தமிழ்மறவர் திரு.அ.ஆ.தமிழ்த்திரு அவர்களின் மறைவிற்குப் பிறகு அவர் விட்டுச்சென்ற முத்தமிழ் சார் பணிகளைத் தொடர்ந்து செயலாற்றி வரும் நிலையில், மலேசிய கலைத்துறையில் தமது மாணவர்களைக் கொண்டு தாம் தடம் பதித்து வருவதை மலேசிய மக்கள் கவனித்து வருகின்றனர் மற்றும் அதற்கான அங்கீகாரத்தையும் இவ்விருதின் மூலம் தமக்கு தலைநகரில் வழங்கி இருப்பது கலைத்துறையில் தமது அர்ப்பணிப்பிற்குக் கிடைத்த அங்கீகாரமாக தாம் கருதுவதாக ஆசிரியர் தமிழ்தனா குறிப்பிட்டார். அதுமட்டுமல்லாமல் மலேசியாவிலேயே இவ்விருதைப் பெற்ற ஒரே ஆசிரியர் என்ற முறையில் இவ்விருதை மலேசிய கல்வி அமைச்சுக்குச் சமர்ப்பிப்பதாகவும் குறிப்பிட்டார்.
போட்டிகளுக்கு மாணவர்களைத் தயார் படுத்தும்போது வெளியிலிருந்து பயுற்றுனர்களை அழைத்து வந்து பணம் செலுத்தி பயிற்சி கொடுத்து வெற்றிகளை வசமாக்காமல் தமது சுய ஆற்றலின் மூலம் அவர்களைச் செதுக்கி வெற்றிகளை இதுகாலம் தாம் வசமாக்கி வருவதாகவும் அதற்கு இறைக்கும் தமிழ் அன்னைக்கும் தம்மோடு கைக்கோர்த்து நடக்கும் ஆலோசகர்களுக்கும் ,கொடை உள்ளம் கொண்ட நல்லுள்ளங்களுக்கும் நன்றி பாராட்டுவதாகக் கூறினார்.
பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் பல்லின கலாச்சாரங்களைக் கற்ற மாணவச் சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற தமது கொள்கையின்படி, தமிழர்க்கலையை அரசு அங்கீகாரத்தோடு தமிழ், தேசிய மற்றும் சீன பள்ளிகளில் கல்வி அமைச்சு அமல்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டை அகத்தில் கொண்டு தாம் முன்னெடுத்து வரும் முயற்சிகளுக்கு அரசு மற்றும் அரசு சாரா இயக்கங்கள் தமக்குக் கைக்கொடுக்க வேண்டும் என்றும் தாழ்மையுடன் கேட்டுக்கொண்டார்.
இது சார்ந்து தேசிய ஒருமைப்பாட்டுத் துணை அமைச்சரும் செகாமட் நாடாளுமன்ற உறுப்பினருமான மாண்புமிகு யுனேஸ்வரன் ராமராஜ் அவர்களிடம் தாம் கருத்துரைத்திருப்பதாகவும் அதற்கான செயல்முறைகளைத் தாம் விரைவில் காண ஆவலாக இருப்பதாகவும் கூறினார் ஆசிரியர் தமிழ்தனா.















