தமிழர் தொழில் முன்னேற்றத்தை  , வரவிருக்கும் சர்வதேச தமிழர் வணிக மாநாடு சிறுதானியத் தொழில்துறைக்கு புதிய உயிர் ஊட்டும் நிகழ்வாக உருவெடுக்கிறது.

 டிசம்பர் 09. 2025


தமிழர் தொழில் முன்னேற்றத்தை  , வரவிருக்கும் சர்வதேச தமிழர் வணிக மாநாடு சிறுதானியத் தொழில்துறைக்கு புதிய உயிர் ஊட்டும் நிகழ்வாக உருவெடுக்கிறது.

தமிழர் வர்த்தக சங்க தலைவர் பி.என். பாலகிருஷ்ணன் பத்துமலை தெரிவித்ததாவது: ஒருகாலத்தில் தமிழர்களின் வீட்டுவாசலில் சிறுதானியங்கள், பாரம்பரிய பொருட்கள் தொடர்பான தொழில் திறம்பட வளர்ச்சி கண்டிருந்தது. ஆனால் இப்போது இந்தத் துறையில் மக்களின் ஈர்ப்பு குறைந்திருப்பது கவலைக்குரியது. இதை மாற்றி, ஒவ்வொரு தமிழர் வீட்டிலும் சிறுதானிய வணிகத்தை மீண்டும் எழச் செய்வதே மாநாட்டின் நோக்கம் என்றார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக சிறு தொழில் சார்ந்த பயிற்சிப் பட்டறைகள், ஆய்வு கருத்தரங்குகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இந்த வருடம் அவற்றின் ஆண்டு விழா, பெரிய அளவில் — சர்வதேச மாநாட்டாக — உயர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் 23, 24 தேதிகளில் ஷா ஆலமிலுள்ள மிட்லண்ட்ஸ் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில்,
மலேசியா, இந்தியா, ஸ்ரீலங்கா, சிங்கப்பூர், மத்திய கிழக்கு, ஐரோப்பா ஆகியவற்றைச் சேர்ந்த 12 நாடுகளிலிருந்து 2,000க்கும் மேற்பட்ட தொழில்துறை நிபுணர்கள் மற்றும் வணிகர்கள் பங்கேற்கின்றனர்.

மலேசியாவில் இருந்து மட்டும் 1,500 வர்த்தகர்கள், இந்தியாவில் இருந்து 150 வணிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மலேசியாவில் உள்ள வணிக வாய்ப்புகளை அறிந்து கொள்ளவும், மலேசிய தமிழர்களுடன் புதிய தொழில் முயற்சிகளை உருவாக்கவும் இது பெரிய மேடை ஆகும்.

வீட்டிலிருந்தபடியே சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய பொருட்களை விற்பனை செய்ய விரும்பும் பெண்கள், இளைஞர்கள் மற்றும் தொடக்க நிலை தொழில் முனைவோருக்கு தேவையான அனைத்து பயிற்சிகளும் இந்த மாநாட்டில் வழங்கப்பட உள்ளன.

சிறுதானியத் தொழில்துறையின் மறுமலர்ச்சிக்கு இந்த மாநாடு புதிய திசை நிர்ணயம் செய்யும் என ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *