ஈப்போ-சிங்கப்பூர் இடையிலான நேரடி விமான சேவையை பாத்தேக் ஏர் தொடங்கியது

ஈப்போ-சிங்கப்பூர் இடையிலான நேரடி விமான சேவையை பாத்தேக் ஏர் தொடங்கியது

ஈப்போ டிச 9

இங்குள்ள சுல்தான் அஸ்லான் ஷா விமான நிலையத்திலிருந்து ஈப்போ-சிங்கப்பூர் இடையிலான நேரடி விமான சேவையை பாத்தேக் ஏர் தொடங்கியது.

இந்த தினசரி விமான சேவையின் மூலம் சிங்கப்பூர் பயணிகள் ஈப்போ நகரின் அழகு மற்றும் இதர சிறப்பு அம்சங்களை எளிதில் கண்டு களிக்க முடியும்.

சிங்கப்பூரிலிருந்து முதல் விமானத்தில் வந்தடைந்த பயணிகளுக்கு அன்பளிப்பு பைகள் வழங்கப்பட்டு வரவேற்கப்பட்டனர்.

பேராக் மாநிலத்தின் சுற்றுலா, தொழில்துறை, முதலீடு ஆகியவற்றிற்கான ஆட்சி குழு உறுப்பினர் லோ ஷி யீ இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்டு அன்பளிப்பு பைகளை பயணிகளுக்கு வழங்கினார்.

பாத்தேக் ஏரின் இந்த புதிய நேரடி விமான சேவை பேராக் மாநிலத்தின் சுற்றுலா மற்றும் வர்த்தகத் துறைகளை வலுவடையச் செய்யும் என லோ கூறினார்.

சிங்கப்பூரிலிருந்து வந்தடையும் பயணிகள் மலேசியாவில் இதர நகரங்களுக்கு எளிதில் செல்ல இந்த புதிய நேரடி விமான சேவை வழி வகுப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பாத்தேக் ஏரின் இந்த புதிய நேரடி விமான சேவையை பேராக் அரசாங்கம் பெரிதும் வரவேற்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் பேராக் சுற்றுலாத் துறையின் தலைமை நடவடிக்கை அதிகாரி சுரைடா தாயிப், சுற்றுலா துறையின் அனைத்துலக விளம்பர பிரிவு(ஆசியான்) இயக்குனர் பைசூரி பஹாரும் மற்றும் பாத்தேக் ஏர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *