கோலாலம்பூர், டிசம்பர் 10 — YB சரஸ்வதி இரண்டாவது தவணைக்கான செனட்டராக இன்று அதிகாரப்பூர்வமாக பதவியேற்றம்.

2022 டிசம்பர் 9ஆம் தேதி முதல் முறையாக செனட்டராக நியமிக்கப்பட்ட YB சரஸ்வதி, தனது முதல் தவணையை இவ்வாண்டு டிசம்பர் 9ஆம் தேதியுடன் நிறைவு செய்திருந்தார்.
புதிய தவணைக்கான பதவியேற்பு இன்றைய தினம் காலை 10 மணியளவில் மேலவை தலைவர் டத்தோ அவாங் பெமி பின் அவாங் அலி பாசா அவர்களின் முன்னிலையில் நடை பெற்றது. பதவி உறுதிமொழி செய்து, இரண்டாம் தவணைக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்ட YB சரஸ்வதி, இது தனது மீது வைக்கப்பட்ட நம்பிக்கைக்கு கிடைத்த உயரிய அங்கீகாரம் எனக் குறிப்பிட்டார்.
நாட்டின் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்கள் தன்னை நம்பிக்கையுடன் செனட்டராகவும், துணையமைச்சராகவும் நியமித்ததை நினைவுகூர்ந்த அவர், இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துள்ளார்.
தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு துறை துணையமைச்சராக ஓராண்டு காலம் பணியாற்றியபோது, மக்களுக்கு அணுகக்கூடிய பல்வேறு சேவைகளை வழங்கி, துறையின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை விரைவாக முன்னெடுத்ததாக YB சரஸ்வதி கூறினார்.
தற்போது தேசிய ஒருமைப்பாட்டு துறை துணையமைச்சராக பணியாற்றி வரும் YB சரஸ்வதி, நாட்டின் பல்துறை சமூகங்களுக்கிடையே ஒற்றுமை, ஒன்றிணைவு, பரஸ்பர மரியாதை ஆகியவற்றை வலுப்படுத்துவது தனது பணியின் முக்கிய நோக்கம் என வலியுறுத்தினார்.
பதவியேற்பைத் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்த அவர், மக்களின் நம்பிக்கைக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் இணங்க செயல்படுவது தனது நிலையான கடமை எனவும் உறுதிப்படுத்தினார்.















