மணிமன்றத்தின் 59ஆம் ஆண்டு நிறைவு – தமிழர் இளைஞரின் வரலாற்றுப் பயணம் தொடர்கிறது!

1956ஆம் ஆண்டில் தொடங்கிய முதல் மணிமன்றத்திலிருந்து, 1966ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் நாள் தேசிய அளவில் அதிகாரப்பூர்வமாகப் பதிவுப்பெற்ற மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவை, இன்றோடு தனது 59வது அகவைநிறை நாளை பெருமையுடன் கொண்டாடுகிறது.
அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடரும் இந்தப் பயணத்தில், மணிமன்றம் மலேசியத் தமிழ் இளைஞர்களின் குரலாகவும், சமூக முன்னேற்றத்தின் வழிகாட்டியாகவும், கல்வி, பண்பாடு, மற்றும் ஒற்றுமையின் சின்னமாகவும் திகழ்ந்துள்ளது.
இன்றைய நாளில், மணிமன்றம் தனது வலிமையான உறுதிமொழியை மீண்டும் உறுதிப்படுத்துகிறது —
தமிழ் பள்ளிகள் முன்னேற்றம் என்பது எங்கள் நிலையான இயக்கமாகும். தமிழ் மொழிக் கல்வி வளரும் வழியில், தமிழ் பள்ளிகளுக்கு அரசாங்க ஆதரவு, தரமான ஆசிரியர் பயிற்சி, மற்றும் நவீன கல்வி வசதிகளை உறுதிசெய்யும் பணியில் மணிமன்றம் இடைவிடாமல் செயற்படும்.
அதேபோல், தமிழ் மொழியை மேம்படுத்தி மகத்துவப்படுத்துவது எங்கள் பண்பாட்டு கடமையாகும். தமிழ் மொழி அரசு நிர்வாகத்திலும், தகவல் தொழில்நுட்பத்திலும், கல்வி மற்றும் ஊடக துறைகளிலும் இடம்பிடிக்க மணிமன்றம் தொடர்ந்து போராடி வருகிறது.
இந்த நீண்ட பயணத்தில் பங்காற்றிய தேசிய, மாநில, மாவட்ட மற்றும் மன்ற நிர்வாகிகள், மூத்த தலைவர்கள் மற்றும் அனைத்து மணிமன்ற உடன்பிறப்புகளுக்கும் எங்களது இதயம் கனிந்த நன்றியினை உரித்தாக்குகிறோம்.
வாழ்க மணிமன்றம்,
வளர்க மணிமன்ற உடன்பிறப்புகள்!
மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவை















