பிரதமர் அன்வார் இப்ராஹிம் உலகின் செல்வாக்கு மிக்க முஸ்லிம் தலைவர்களில் முதல் 10 இடங்களுக்குள் முன்னேற்றம

கோலாலம்பூர்: 30.10.2025
ஜோர்டானைத் தளமாகக் கொண்ட அரச இஸ்லாமிய மூலோபாய ஆய்வுகள் மையத்தினால் (RISSC) வெளியிடப்பட்ட ‘உலகின் 500 மிகவும் செல்வாக்கு மிக்க முஸ்லிம்கள் 2026’ (The Muslim 500) பட்டியலில் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 10வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இது, 2025ஆம் ஆண்டு அவர் பெற்ற 15வது இடத்தை விட 5 இடங்கள் அதிகமாகும். அவர் தலைமை தாங்கும் ஒற்றுமை அரசாங்கத்தின் தலைவராக ஆற்றிய பங்கும், சர்வதேச மனிதாபிமானப் பிரச்சினைகளில், குறிப்பாகப் பலஸ்தீனப் பிரச்சினையில், இஸ்லாமிய உலகின் உரத்த குரலாக ஒலிக்கின்ற வகையிலும் அவரது செல்வாக்கு உயர்ந்துள்ளதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
கடந்த நவம்பர் 2022ஆம் ஆண்டு நாட்டின் 10வது பிரதமராகப் பொறுப்பேற்ற அவர், ‘மடானி’ கொள்கையை அறிமுகப்படுத்தினார். மேலும், ஆசியான் பிராந்தியத்தில் அமைதிப் பேச்சாளராகப் (தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான எல்லைப் பதற்றத்தைக் குறைத்தல்) பங்காற்றியமை மற்றும் மலேசிய சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (UIAM) முன்னாள் வேந்தராக (1983-1988) இருந்தமை போன்ற கல்விப் பங்களிப்புகளுக்காகவும் அவர் பாராட்டப்படுகிறார்.
பலஸ்தீனப் பிரச்சினையில் சியோனிச இஸ்ரேல் ஆட்சியின் அட்டூழியங்களுக்கு எதிராக அவர் எடுத்துள்ள உறுதியான நிலைப்பாடு போற்றப்படுகிறது; ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேஹ் படுகொலை தொடர்பான பதிவுகளை ‘மெட்டா’ நீக்கியதை அவர் ‘அடக்குமுறைக்கு எதிரான கோழைத்தனமான செயல்’ என்று விமர்சித்ததையும் அறிக்கை பதிவு செய்துள்ளது.
கத்தார் அமீர் ஷேக் தமிம் பின் ஹமத் அல்-தானி, பாகிஸ்தானைச் சேர்ந்த ஷேக் முஹம்மது தாக்கி உஸ்மானி மற்றும் யேமனைச் சேர்ந்த ஷேக் அல்-ஹபீப் உமர் பின் ஹபீஸ் ஆகியோர் 2026ஆம் ஆண்டுப் பட்டியலில் முதல் இடங்களில் உள்ளனர். 2009ஆம் ஆண்டு முதல் வெளியிடப்படும் இந்த வருடாந்திரப் பட்டியல், தலைமைத்துவம், மதம், கல்வி, பொருளாதாரம் மற்றும் மனிதாபிமானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செல்வாக்கு மிக்க முஸ்லிம்களை அங்கீகரிக்கிறது.















