சிலாங்கூர் மாநிலத்தில் பாஸ் கட்சி ஆட்சியமைத்தால் நான்கு இலக்கு எண் கடைகள் மூடப்படாது

ஷா ஆலாம்: 08.10.2025
சிலாங்கூர் மாநிலத்தில் பாஸ் கட்சி ஆட்சியமைத்தால் மாநிலத்தில் உள்ள நான்கு இலக்கு எண் கடைகள் மூடப்படாது என்று சிலாங்கூர் மாநில பாஸ் கட்சி உறுதி அளித்துள்ளது.
சிலாங்கூர் பாஸ் ஆணையர் அப்துல் ஹலீம் தமுரி கூறுகையில், இந்த விவகாரம் குறித்து மாநில மக்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும், ஏனெனில் சிலாங்கூர் ஒரு பல்லின மக்கள் கொண்ட மாநிலம் என்பதால் அங்குள்ள மாறுபட்ட கொள்கைத் தேவைகளைத் தங்களால் புரிந்துகொள்ள முடியும் என்றும் கூறினார்.
ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் நான்கு இலக்கு எண் கடைகளை மூடும் நடவடிக்கைகளை பாஸ் அவசரப்பட்டு எடுக்காது என்றும், மாறாக எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன் முழுமையான ஆய்வுகளையும் விவாதங்களையும் நடத்துவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், பாஸ் கட்சியால் நகர்ப்புறப் பகுதிகளுக்குள் நுழையவோ அல்லது அவற்றைக் கட்டுப்படுத்தவோ முடியாது என்ற குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்து, பாஸ் கட்சியின் ஆதரவு இப்போது பெருகி வருவதாக வலியுறுத்தினார்.
மேலும், பாஸ் கட்சியில் பல்வேறு பின்னணிகளைக் கொண்ட பல நிபுணர்களும் கல்வியாளர்களும் உள்ளனர், அவர்களால் சிறந்த அரசாங்கத்தை அமைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.















