சிகாமாட்டில் தேவ ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி பெருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது

சிகாமாட்: 07.10.2025
ஜொகூர், சாஆ பட்டணத்தில் அமைந்திருக்கும் தேவ ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி பெருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. நவராத்திரியின் 9ஆம் நாளான சரஸ்வதி பூஜையன்று எஸ்.பி.எம் தேர்வு எழுதவிருக்கும் சாஆ இடைநிலைப்பள்ளி மற்றும் ஸ்ரீ பாலி இடைநிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்காகச் சிறப்புப் பிரார்த்தனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட வர்ணம் தீட்டும் போட்டியில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
கடந்த ஜூலை மாதம் ஆடித் திருவிழாவின்போது தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வர்ணம் தீட்டும் போட்டியை நடத்தினோம். ஆகவே, இம்முறை நவராத்திரி பெருவிழாவில் இடைநிலைப்பள்ளியில் பயிலும் இந்திய மாணவர்களுக்கு வர்ணம் தீட்டும் போட்டியை நடத்தினோம் என்று ஆலயத்தின் செயலாளரும், லாபிஸ் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியருமான திரு.கோவிந்தன் பெருமாள் கூறினார். மேலும், வருங்காலங்களில் மாணவர் பிரிவு, பொதுப் பிரிவு என இரு பிரிவுகளாகச் சமய புதிர்ப் போட்டிகள் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இளம் பருவத்திலேயே சமயம் மீது நாட்டம் ஏற்படுத்த இதுபோன்ற போட்டிகள் நடத்துவது அவசியம், என்று ஆலயத் தலைமை குருக்கள் திரு. பிரேம் குமார் மணியம் கூறினார். தானத்தில் சிறந்தது அன்னதானம். அதற்கு நிகராக மற்றொரு தானம் உண்டு. அதுதான் வித்யா தானம். வித்யா என்றால் கல்வி. கல்வித் தானம் செய்வது மிகக் கடினம். ஆகவே, மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்து தேர்ச்சி பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்வது வித்யா தானம் செய்த பலனைக் கொடுக்கும் என்று அவர் தெரிவித்தார்















