47வது ஆசியான் உச்சி மாநாடு: பாதுகாப்புப் பணிகளுக்காக 13,000க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நியமனம்
கோலாலம்பூர்:செப்டம்பர் 230. 2025

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் 47வது ஆசியான் உச்சி மாநாட்டிற்காக 10,000க்கும் மேற்பட்ட மலேசியக் காவல்துறை அதிகாரிகள் மற்றும் 3,000 மலேசியக் குடிவரவுத் துறை அதிகாரிகள் உட்பட மொத்தம் 13,000க்கும் அதிகமானோர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
மாநாட்டின் சுமூகமான செயல்பாட்டை உறுதி செய்வதற்காக, எந்தவொரு அச்சுறுத்தலையும் தடுக்க விரிவான பாதுகாப்பு ஒத்திகை மற்றும் தீவிரப் பயிற்சி உட்பட அனைத்து ஏற்பாடுகளும் மிக நுணுக்கமாகச் செய்யப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
இம்மாநாட்டிற்கு வரும் விருந்தினர்களைக் கையாள்வதில் பாதுகாப்பு அம்சங்களும், நாட்டின் நுழைவு வாயில்களில் விருந்தினர்களை வரவேற்கும் செயல்முறையும் மிக முக்கியமான இரண்டு கூறுகள் என்று வலியுறுத்திய அமைச்சர், இதற்காக குடிவரவுத் துறை அதிகாரிகள் ஆறு தீவிரப் பயிற்சித் தொகுதிகள் மூலம் பயிற்சி பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், நாட்டின் நுழைவு வாயில்களில் பிரீமியர் வழித்தடம் மற்றும் வேக வழித்தடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் முழுமையாகச் செயல்படுவதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.
உள்துறை அமைச்சின் மாதாந்திரக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன், ஆசியான் அமைப்பின் தற்போதையத் தலைவராக இருக்கும் மலேசியா, நாட்டின் குரலை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்தாமல், ஒட்டுமொத்தமாக 68 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட 10 உறுப்பு நாடுகளின் நிலைப்பாட்டையும் பிரதிபலிக்கிறது என்று குறிப்பிட்டார்.
இந்த மாநாட்டில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் பிரேசில், இந்தியா போன்ற நாடுகளின் தலைவர்கள் உட்படப் பல உலகத் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
📰 செய்தி: வீர சின்னையன்















