மலேசிய இந்தியர்களிடையே மீண்டும் நம்பிக்கையைப் பெற்று வரும் மஇகா – எம்.பி. ராஜா நம்பிக்கை

சமூக மேம்பாட்டுத் திட்டங்கள், கல்வி உதவிகள் மூலம் இந்தியச் சமூகத்தின் முன்னேற்றத்திற்குத் தொடர்ந்து குரல் கொடுக்கும் கட்சி எனப் பெருமிதம்

சிலாங்கூர், நவம்பர் 5 – மலேசிய இந்தியச் சமூகத்தினரிடையே மீண்டும் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வரும் மஇகா, சமூகத்தின் அடிப்படைத் தேவைகள் மற்றும் எதிர்கால முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு தனது மக்கள் நலச் சேவைகளை மேலும் விரிவுபடுத்தி, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கும் என கிரீன் பார்க் மஇகா கிளைத் தலைவரும், முன்னாள் சிலாங்கூர் மாநிலத் தலைவருமான எம்.பி. ராஜா தெரிவித்தார்.

மலேசிய இந்தியர்களின் தாய்க்கட்சியாகத் திகழும் மஇகா, தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் மற்றும் கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் ஆகியோரின் சிந்தனை, வழிகாட்டுதல் மற்றும் தலைமையின் கீழ் புதிய அணுகுமுறைகளுடனும், வலுவான செயல்திட்டங்களுடனும் சமூகப் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக, இந்தியச் சமூகத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கும் கல்வித் துறைக்கு முன்னுரிமை அளித்து, கல்விக் கடன், கல்வி உபகாரச் சம்பளம் மற்றும் பல்வேறு சமூகநல உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இத்தகைய முயற்சிகள் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குக் கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்துவதோடு, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், எதிர்காலத்தில் தன்னம்பிக்கையுடன் முன்னேறவும் உறுதுணையாக அமையும் என்றார்.

அதன் ஒரு பகுதியாக, அண்மையில் கொண்டாடப்பட்ட தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பொருளாதார வசதி குறைந்த குடும்பங்களும் பண்டிகையை மகிழ்ச்சியுடனும் மனநிறைவுடனும் கொண்டாட வேண்டும் என்ற உயரிய நோக்கில் கிரீன் பார்க் மஇகா கிளையின் சார்பில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் சமூகநல நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த முயற்சி வெறுமனே பண்டிகைக் கால உதவியாக மட்டுமல்லாமல், சமூகத்தின் உண்மையான தேவைகளை உணர்ந்து மக்களுடன் நேரடியாக இணைந்து செயல்படும் மஇகாவின் மக்கள் நல அணுகுமுறையைப் பிரதிபலிப்பதாக அமைந்தது.

மேலும், சமூகத்தினரின் தேவைகளுக்கு ஏற்ப உதவிகளை வழங்குவது என்பது குறிப்பிட்ட பண்டிகைக் காலங்களுடன் முடிவடைந்துவிடக் கூடாது. மக்களின் இன்ப, துன்பங்களில் தொடர்ந்து பங்கெடுத்து, அவர்களின் முன்னேற்றத்திற்குத் துணைநிற்பதே மஇகாவின் முக்கிய நோக்கமாகும் என்றும் எம்.பி. ராஜா வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மஇகா உதவித் தலைவர் டத்தோ டி. முருகையா, டத்தோ சிவசுப்ரமணியம், சிலாங்கூர் மாநிலச் செயலாளர் சசிதரன், கிள்ளான் தொகுதித் தலைவர் தர்மலிங்கம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், சமூகத் தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சிக்குச் சிறப்புச் சேர்த்தனர்.

மக்களின் நம்பிக்கையைச் செயல்பாடுகள் மூலமாக வென்றெடுப்பதும், கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூகநல மேம்பாட்டின் வழியாக அடுத்த தலைமுறைக்கான வலுவான அடித்தளத்தை உருவாக்குவதும் மஇகாவின் எதிர்காலச் செயல்பாடுகளில் முக்கிய இடம் பெறும் என இந்நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *