உள்நாட்டு வியாபாரிகளுக்கு ஆதரவு தாருங்கள், வெளிநாட்டு வியாபாரிகளைப் புறக்கணியுங்கள்= பாப்பா ராய்டு வேண்டுகோள்

கிள்ளான், மார்ச் 29

உள்நாட்டு சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளுக்கு பொதுமக்கள் முழுமையான ஆதரவு வழங்க வேண்டும் என மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் வலியுறுத்தினார். அதே நேரத்தில், வெளிநாடுகளில் இருந்து வந்து இங்கு வியாபாரம் செய்பவர்களைப் புறக்கணிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

இன்று கிள்ளானில் நடைபெற்ற இசிஆர் விற்பனைச் சந்தையின் தொடக்க நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட அவர், சந்தையைத் திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கியதுடன், பின்னர் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.

“இந்த நாட்டில் பிறந்து வளர்ந்து, கடின உழைப்பின் மூலம் சிறு அளவில் தொழிலை ஆரம்பித்து குடும்ப வாழ்வாதாரத்தை முன்னேற்ற முயலும் உள்ளூர் வியாபாரிகளின் வளர்ச்சிக்காக மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். அவர்களது பொருட்களை வாங்குவதன் மூலம் அவர்களுக்கு துணை நிற்க வேண்டும்,” என அவர் கூறினார்.

விற்பனைச் சந்தையில் பல்வேறு வகையான உடைகள், உணவுப் பொருட்கள், அழகு சாதனங்கள் உள்ளிட்ட வாடிக்கையாளர்களை கவரும் பல பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன என்றும், அவற்றை வாங்கி உள்ளூர் தொழில்முனைவோர்களின் முன்னேற்றத்திற்கு பொதுமக்கள் பங்காற்ற வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், இச்சந்தையில் பங்கேற்றுள்ள உள்ளூர் சிறு தொழில் வியாபாரிகளுக்கு மக்கள் பேராதரவு வழங்க வேண்டும் என அவர் “அலை ஒளி” ஊடகத்திடம் தெரிவித்தார்.

நிகழ்ச்சி முடிவில், விற்பனைச் சந்தையின் ஒருங்கிணைப்பாளர்களுடன் பாப்பா ராய்டு வீரமான் சந்தையைச் சுற்றிப் பார்வையிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *